மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.
பொது நுழைவுத் தேர்வு
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் யு.ஜி.சி. சார்பில் வெளியிடப்பட்டது.
அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (க்யூட் தேர்வு) மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மார்ச் 12ஆம் தேதி வரைபொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்களின் எண்ணிக்கை மற்றும் பாடங்களின் தெரிவுகளைப் பொறுத்து, 3 ஷிஃப்டுகளாகத் தேர்வுகள் பல நாட்களுக்கு நடைபெறும். தேர்வர்கள் https://cuet.samarth.ac.in என்ற இணைய முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால், 011 - 40759000 / 011 - 69227700 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம். cuet-ug@nta.ac.in என்ற இ- மெயில் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்தார்.
பிளஸ் 2 மதிப்பெண்கள் முக்கியமில்லை
இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது என்று ஏற்கெனவே யுஜிசி தெரிவித்து இருந்தது.
தேர்வு முடிவுகள் எப்போது?
இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகளை ஜூன் 3 ஆம் வாரமும், முதுநிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை ஜூலை மாதத்திலும் வெளியிட யுஜிசி திட்டமிட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க யுஜிசி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் விண்ணப்பிக்க: https://cuet.samarth.ac.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.
கூடுதல் விவரங்களுக்கு: 011 - 40759000 / 011 - 69227700
இ- மெயில் முகவரி: cuet-ug@nta.ac.in
இதையும் வாசிக்கலாம்: 10th Tamil Question Bank: 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் எளிதாக சதம் அடிக்கலாம்; மாதிரி வினாத்தாள் இதோ! https://tamil.abplive.com/education/tn-10th-tamil-question-bank-with-answers-2023-tamil-nadu-sslc-important-questions-tamil-subject-101574/amp