உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வால் கல்லூரிப் படிப்பு கனவாகிப்போய்விடும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் எச்சரித்துள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 


''மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கத்தோடு  பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. ஏழை, எளிய, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டப் படிப்பு படிக்க, நுழைவுத் தேர்வு என்பது தடையாக இருக்கும். இது சமூக நீதிக்கு எதிரானது. 


இதுகுறித்துப் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுஜிசி நிதியில் செயல்படும் 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில் 2022-23 கல்வியாண்டு முதல் கல்லூரிப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு முறையை பல்கலைக்கழகங்கள் கடைப்பிடிக்கலாம் என்றும், பிற தனியார், அரசு கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும்  நுழைவுத் தேர்வைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை மூலம் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படும் என்றும் ஏப்ரல் முதல் வாரம் அதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.


கலை அறிவியல் படிப்புகளுக்கும் கூட பொது நுழைவுத் தேர்வு  என்பது இட ஒதுக்கீட்டைச் சீர்குலைக்கும் வகையில் சமூக நீதிக்கு எதிரானது.  ஏழை, எளிய, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி கல்லூரிப் படிப்பே கனவாகிப் போய்விடும். இத்தேர்வு முறையினால் 12 ஆண்டுகள் படித்து எடுத்துள்ள மதிப்பெண் புறந்தள்ளப்பட்டு 12-ம் வகுப்பு படிக்கும்போதே நுழைவுத் தேர்வுக்குப் படிப்பதற்கான தேவையை உருவாக்கி விடும். பணம் படைத்தவர்களே படிக்க முடியும் என்ற சூழலை உருவாக்கிவிடும். மேலும் இந்த நுழைவுத் தேர்வு நீட் தேர்வு போன்று  ஒட்டுமொத்தமாக மாநிலப் பாடத்திட்டத்தைப் புறக்கணிக்கும்.  


 



பி.கே.இளமாறன்


தமிழக முதலமைச்சர் பெண்கள் பட்டப் படிப்பு படிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாதந்தோறும் ரூ.1000 அறிவித்துள்ளது. இந்த வேளையில், பட்டப் படிப்பு மேற்கொள்வதற்கான தகுதியை மத்திய அரசு நிர்ணயிப்பது ஏழை, எளிய மக்களின் கல்விக்குக் கடிவாளம் போடுவதாக உள்ளது.


சமூக நீதிக்கு எதிரான  நுழைவுத் தேர்வு அறிவிப்பை ரத்து செய்து பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகள் நடத்தப்பட வேண்டுமென மத்திய அரசை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே  நிரந்தரத் தீர்வாக அமையும். மேலும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் தமிழக முதலமைச்சருக்கு  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்ற உறுதிமொழியினையும் அளிக்கின்றோம்''.


இவ்வாறு பி.கே.இளமாறன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண