முதல்வர் துபாயில் அணிந்திருந்த உடை குறித்து தவறான தகவலை பரப்பிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
முதல்வர் முதலீட்டாளர்களை ஈர்க்க துபாய் சென்றிருந்த நிலையில், அங்கு அவர் அணிந்திருந்த உடை 17 கோடி நிதியமைச்சர் தகவல் தெரிவித்திருப்பதாக சொல்லி தகவல் ஒன்றை பாஜக நிர்வாகி அருள்ராஜ் என்பவர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் நிதியமைச்சரை டேக் செய்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “தமிழ்நாடு காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம். வடிகட்டப்பட்ட முட்டாள் இது போன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. சங்கிகள் வாட்ஸ்அப் விஷத்தைத் தாண்டிச் செல்லக் கூடாது” என்று பதிவிட்டு இருக்கிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த 5 நாள் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் துபாய் பயணத்தை முடித்து இன்று அதிகாலை காலை 2 மணியளவில் சென்னை திரும்பினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் அப்போது, “ நான் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக துபாய், அபுதாபி பயணம் சென்று வந்திருக்கிறேன். என்னுடைய இந்தப் பயணம் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமைந்தது. தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வெளிநாட்டினர் பாராட்டு தெரிவித்தனர். தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீகளை ஈர்க்கும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். அதிமுக ஆட்சியில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தக்களும் வெறும் காகித கப்பல்களாகவே இருந்தன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் விரைவாக தொழில் தொடங்கி வேலை வாய்ப்பாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். துபாயில் இருந்தப் போது நான் தமிழ்நாட்டில் இருந்ததை போல் உணர்ந்தேன்” எனத் தெரிவித்தார். இதனிடையே முதல்வர் ஸ்டாலின் அரசு பணத்தில் சுற்றுலா சென்றிருப்பதாகவும், எக்ஸ்போவின் இறுதி நேரத்தில் சென்றிருப்பதாகவும் விமர்சனம் செய்தார். இதற்கு விளக்கம் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுகவின் பணத்தில்தான் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது என்றும் இறுதி நேரத்தில் சென்றதால்தான் பலரை சந்திக்க முடிந்தது என்றும் விளக்கமளித்தார்.