தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதலே கட்சியை மற்ற தலைவர்கள் இங்கு வளர்த்தெடுத்ததை காட்டிலும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டுச் சேர்க்க வேண்டும், கட்சியின் செல்வாக்கை உயர்த்த வேண்டும், அதோடு தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார்.



பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை


தமிழக பாஜகவில் பல்வேறு சீனியர்கள் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத மாநிலத் தலைவர் பதவி அண்ணாமலைக்கு கிடைந்த நிலையில், அதிருப்தியில் இருந்த அவர்கள் அத்தனை பேரவையும் தற்போது தனது ஆதரவாளர்களாக மாற்றிக்கொண்டு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஒரிஜினல் அரசியல்வாதியாக தேர்தல் களத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார் அண்ணாமலை.


ஏற்கனவே நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட வேண்டும் என்ற துணிகர முடிவை எடுத்து அதில் உறுதியாக நின்றது, ஆளுங்கட்சி திமுகவிற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக முன்னெடுக்க தயங்கும் அல்லது காலதாமதாக்கும் விஷயங்களுக்கு உடனடியாக ரியாக்ட் செய்வது, அறிக்கை விடுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என அதிரடி அரசியல் செய்து ஊடகங்களில் தினந்தோறும் பேசுபொறுளாவது என அதிரடி ஆக்‌ஷனில் இறங்கியிருக்கும் அண்ணாமலை, அதே பாணியில் தனது கட்சி கட்டமைப்பிலும் சில உறுதியான முடிவுகளை எடுத்து செயல்படுத்த முனைந்துள்ளார்.


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் ஆக்டிவ் அரசியல் செய்தால் தமிழ்நாட்டில் பாஜகவின் ஜம்பம் எடுபாடாது என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்துவைத்துள்ள அண்ணாமலை, எதையும் ‘பிளான் பண்ணாம செய்யக் கூடாது’ என்பதையும் தெரிந்து வைத்துள்ளார். அதன்விளைவாக, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு பாஜகவை தயார் செய்யும் விதமாக இப்போது நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார்.


இது தொடர்பாக, கடந்த 23ஆம் தேதி டெல்லிக்கு சென்ற அண்ணாமலை, பாஜகவின் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி, தனது பரிந்துரைகளுக்கு அனுமதியும் பெற்று வந்திருக்கிறார். இதன் மூலம் விரைவில் தமிழ்நாடு பாஜகவில் அதிரடியாக நிர்வாகிகள் மாற்றம் நடைபெறவுள்ளது.


அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்ற பிறகே கட்சியில் நிர்வாகிகள் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்கள் வந்ததால் பழைய நிர்வாகிகள் அப்படியே தொடர்ந்தனர். ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பழைய நிர்வாகிகளை வைத்துக்கொண்டு ‘பல்லக்கு’ தூக்க முடியாது என்பதால், துடிப்புள்ள, களத்திற்கு சென்று பணியாற்றும் ஆர்வமுள்ள புதிய நிர்வாகிகளை நியமிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.


நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சரியாக பணி செய்யாத 9 மாவட்ட பாஜக தலைவர்களை மாற்றி அமைத்து, அவர்களுக்கு பதிலாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை பாஜக மாநில மையய குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி, மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவின் முக்கியமான உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.


இந்த கூட்டத்தின் ஆலோசனைக்கு பிறகு புதிய மாநில நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அதேபோல், மாவட்ட தலைவர்களும், அணிகளின் பிரிவு தலைவர்களும் மாற்றம் செய்யப்படவுள்ளனர்.