டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் சென்னை மையம் ஒன்றில் தேர்வர்களை 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வை முடிக்கச் சொன்னதால், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் இன்று (மே 21) 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் நடைபெற்றன. தேர்வுகள் பெரும்பாலும் எளிதாகவே இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 5,529 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வுக்கு, மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்தனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத, 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பித்தனர். இதில் இருந்து 5,500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுக்கு அனுப்பப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் மையத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் அறை கண்காணிப்பாளரின் கைக்கடிகாரம் பழுதானதால், தவறுதலாக 45 நிமிடங்கள் முன்பாகவே தேர்வர்கள் விடைத்தாளை முடிக்கக் கட்டாயப் படுத்தப்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வர்கள் கைக்கடிகாரத்தைக் கட்டிச் செல்ல டிஎன்பிஎஸ்சி அனுமதி அளித்திருந்தது. எனினும் ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்திருந்தது.
இதுகுறித்து செயின்ட் தாமஸ் மவுண்ட் தேர்வு மையத்தில் எழுதிய தேர்வர் தென்னரசு 'ஏபிபி நாடு'விடம் பேசினார். அவர் கூறும்போது, ''தேர்வு நேரம் காலை 9:30 மணி முதல் 12:45 மணி வரை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எங்கள் அறையில் 20 தேர்வர்கள் தேர்வு எழுதுவதாக இருந்தது. 5 பேர் தேர்வுக்கு வரவில்லை. 15 தேர்வர்கள் தேர்வை எழுதினோம்.
தேர்வு மையத்துக்குள் கடிகாரத்தைக் கட்டிச் செல்ல எல்லோருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எங்கள் அறைக்கு மட்டும் அறை கண்காணிப்பாளர் அனுமதி அளிக்கவில்லை. விதிகளை மீறி அனைவரின் கடிகாரங்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்.
அறை கண்காணிப்பாளரின் கைக்கடிகாரம் பழுதாகி இருந்ததா என்று தெரியவில்லை. தவறான அறிவுறுத்தலை எங்களுக்கு வழங்கிவிட்டார். மணி கேட்டதற்கு அவர் தவறான நேரத்தைக் கூறிவிட்டார். கொள்குறி வகைத் தேர்வு என்பதால், எவ்வளவு நேரம் ஆனது என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை. இதனால், 12.30-க்கு முடிக்க வேண்டிய தேர்வை 11.45 மணிக்கே முடிக்க வைத்தார். 45 நிமிடங்கள் முன்கூட்டியே முடிக்க வேண்டி இருந்தது. இதனால் குழப்பத்தில் அவசரம் அவசரமாக, கடைசி 100 கேள்விகளுக்குத் தவறாக விடை அளித்தோம்.
வெளியே வந்த பிறகுதான் நேரம் தெரிந்தது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகம் இருக்கும் இடமான பிராட்வே பகுதிக்குச் சென்று 15 பேரும் முறையிட்டோம். அவர்கள் எங்கள் அனைவரின் தொடர்பு எண்களையும் வாங்கிவைத்துக் கொண்டனர். ஆணையத்திடம் பேசிவிட்டு, விரைவில் தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்தனர்'' என்று தென்னரசு கூறினார்.