முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் கடந்த 18-ந் தேதி விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டடதற்கு தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்தனர்.


ஆனால், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மட்டும் அதிருப்தி தெரிவித்தது. இந்த நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களைச் சந்தித்தார்.






அப்போது, அவரிடம் பேரறிவாளனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வாழ்த்து கூறியது பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனை கட்டியணைத்தால் என்ன? முத்தம் கொடுத்தால் எங்களுக்கென்ன? அவர்களுடைய கொள்கை வேறு. எங்களுடைய கொள்கை வேறு.


தருமபுரி மாவட்டத் தலைவர் ராஜினாமா செய்தது வேறு விஷயம். இது கட்சித் தலைமை முடிவு செய்ய வேண்டிய விஷயம். இது எல்லாம் தெரிந்துதான் கூட்டணி வைத்துள்ளோம். இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் இந்தியாவில் ராகுல்காந்தி தான் பிரதம வேட்பாளர் என்று முதன்முதலில் சொன்னது யார்? திமுகதானே” என்றார்.




ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று  தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேரறிவாளன், சாந்தனு, முருகன் உள்பட 7 தமிழர்களையும் விடுவிக்க கூடாது என்று காங்கிரஸ் தரப்பில் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஆயுட்கால தண்டனை முடிந்தும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் விடுதலையாகாத நிலையில், பேரறிவாளன் மட்டும் அவரது தாயார் அற்புதம்மாளின் நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்கு பிறகு விடுதலை ஆகியுள்ளார்.


விடுதலையாகிய பேரறிவாளன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண