விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள், அலுவலர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான துறைத்தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் அரசு பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். பதவி உயர்வின் மூலம் தகுதியான பணியாளர்கள், அலுவலர்களை தேர்ந்தெடுத்திடும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் 2 முறை துறைத்தேர்வு ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. இத்துறைத்தேர்வில் தேர்ச்சி பெறும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் கடந்த 1-ந் தேதி முதல் இத்தேர்வுகள் தொடங்கப்பட்டு வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இத்துறை தேர்வில் புதிய நடைமுறையாக கடந்த 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை கணினி முறையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் அதேபோன்று 7, 8-ந் தேதிகளில் கணினி முறையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. சர்வே மற்றும் வருவாய்த்துறைகளுக்கு எழுத்துத்தேர்வு வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று இன்று (அதாவது நேற்று) முதல் 6-ந் தேதி வரையும் மற்றும் 9-ந் தேதியும் எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு 32 வகையான தேர்வுகளை நடத்திட திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பாக குரூப்-1 தேர்வுகள் மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குரூப்-2, குரூப்- 2 ஏ தேர்விற்கான அறிவிப்பு இம்மாதத்திலேயே வெளியிடப்படும். குரூப்- 4 தேர்வு மார்ச் மாதத்தில் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழை மொழித்தேர்வாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றவர்கள் அடுத்தகட்ட தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் இனிவரும் காலங்களில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தினை விட 30 நிமிடத்திற்கு முன்னதாகவே வருகைபுரிய வேண்டும். அவ்வாறு வருகை தராதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் இனிவரும் காலங்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்திட கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஒருமுறை பதிவு செய்துள்ள போட்டித்தேர்வு எழுதுபவர்களில் 60 சதவீதம் பேர் ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் ஆதார் எண்ணை பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.
அதனை தொடர்ந்து விழுப்புரம் சார்நிலை கருவூலத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் துறைத்தேர்வுகளுக்கான வினாத்தாள் வருகை மற்றும் தேர்வு நடைபெறும் மையத்திற்கு வினாத்தாள்கள் கொண்டு சென்ற விவரம் குறித்த பதிவேட்டினை ஆய்வு செய்ததோடு, கருவூல அறையில் உள்ள வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதையும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.