புதுச்சேரி எல்லையம்மன் கோயில் தெருவில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் வீடு உள்ளது. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சராகவும் இருந்தவர்.


கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி அவரது வீடு முன் நிறுத்தி இருந்த ஒரு காருக்கு அடியில் மர்ம பொருள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சோதித்து பார்த்ததில் ஒரு அடிநீள இரும்பு பைப் இருபுறமும் அடைக்கப்பட்டு, மின்சார வயரால் இணைக்கப்பட்டிருந்தது.




இதுகுறித்து தகவல் அறிந்துஅப்போது போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த காமராஜ் தலைமையில் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ததில் அது ‘பைப்’  வெடிகுண்டு வகை என்பதை உறுதி செய்தனர். இதன்பின் அந்த குண்டு பாதுகாப்பாக செயல் இழக்க வைக்கப்பட்டது. இதுதொடர்பாக புதுச்சேரி ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதைத்தொடர்ந்து நாராயணசாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரின் வீட்டை சுற்றி 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


இந்த நிலையில் அந்த வழக்கு தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில்,  தமிழர் விடுதலை படையை சேர்ந்த சிவகங்கை திருசெல்வம் என்ற குமார் (வயது44), தங்கராஜ் என்ற தமிழரசன் (43) கவியரசன் என்ற ராஜா (37), கலைலிங்கம் என்ற கலை (45), ஜான் மார்ட்டின் என்ற இளந்தழல் (31), மதுரை கார்த்தி என்கிற ஆதி (36) ஆகியோ கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தமிழகத்திலும் வழக்குகள் உள்ளதால் சேலம் சிறையில் திருச்செல்வம், சென்னை புழல் சிறையில் தங்கராஜ், வேலூர் சிறையில் கார்த்தி அடைக்கப்பட்டனர். கடலூர் சிறையில் கவியரசன், கலைலிங்கம், ஜான் மார்ட்டின் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர்.




இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் தலைமையில் நடந்து வந்தது. இதுதொடர்பாக 54 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.


இந்தச் சூழலில் இவ்வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி, வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.




கொரோனா  கட்டுப்பாடு  காரணமாக காணொலி மூலம் விசாரணை நடத்திய நீதிபதி, ‘பைப்’ குண்டு வைத்த வழக்கில் திருச்செல்வம், தங்கராஜ், கவியரசன், கலைலிங்கம், கார்த்தி, ஜான் மார்ட்டின் ஆகிய 6 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். மேலும், அவர்களுக்கான தண்டனை விவரம் மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படுமென கூறினார்.


அதன்படி மதியம் நீதிமன்றம் ஆரம்பித்ததும்,  ‘பைப்’ வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்செல்வம், கவியரசன், கலைலிங்கம், கார்த்தி, ஜான் மார்ட்டின் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தங்கராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். மேலும்,  திருசெல்வத்திற்கு மட்டும் ரூ.3 ஆயிரம், மற்ற 5 பேருக்கு தலா ரூ.3,500 அபராதமும் விதிக்கப்பட்டது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண