தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதி முதல் வேகமாக அதிகரித்து வந்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இரவு நேர ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை உள்ளிட்ட பல முக்கியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று குறைந்து வந்தது. இதைத் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் புதிய கட்டுப்பாடு விதிகள் வெளியாகின. 


அதன்படி வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1-12 வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் பிப்ரவரி ஒன்று முதல் கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும், ஆன்லைன் வழியாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது கல்லூரிகள், தொழில்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியே தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது. 


முன்னதாக இன்று தமிழ்நாடு அரசு சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியானது. அதன்படி தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம்  மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்


 தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்/ தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இவை தவிர ஊரடங்கு நீக்கம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி ,


ஊரடங்கு நீக்கம்:


 * 28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது.


* வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கு கிடையாது.


என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நோய்த் தொற்று பரவல் குறைந்திருப்பினும் பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட  ஒரு சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இன்று 28,515 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு; 53 பேர் உயிரிழப்பு..