கோவை ராகிங் சம்பவ எதிரொலியாக கல்லூரியில் ராகிங் தடுப்பு குழு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கல்லூரியில் ராகிங் குறித்து ஆய்வு செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


கோவை அவிநாசி சாலையில் பிரபல தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயது மாணவரை, அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.  மாணவரை ஆபாசமாக திட்டி தாக்கியதுடன், மொட்டை அடித்து, உதைத்தும், துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. காலை 5.30 மணி வரை அறையில் அடைத்து வைத்து தாக்கியுள்ளனர்.


மாணவரை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டதுடன், மது குடிக்கப் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து 18 வயது மாணவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். திருப்பூரில் இருந்து வந்த பெற்றோர் மாணவரை நேரடியாக பார்த்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளனர். தனது மகன் கடுமையாக தாக்கப்பட்டதை கண்டு வேதனையடைந்த பெற்றோர், பீளமேடு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர்.  


இதனையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்து, தாக்கி மிரட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா கல்லூரிகளில் ராகிங் நடை பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ராகிங் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் கீதா சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். கடந்த மாதம் அனுப்பிய சுற்றறிக்கையை மீண்டும் நினைவுபடுத்தி அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


* கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ராகிங் நடை பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


* கல்லூரியில் ராகிங் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். 


* ராகிங் பற்றி உடனடியாக புகார் செய்ய வேண்டிய ஆசிரியர்களின் பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும். 


* ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 


* ராகிங் குறித்து மாணவர்களின் புகார்களை எளிதில் பெரும் வகையில் கல்லூரி முதல்வர்கள் செயல்பட வேண்டும். 


* ராகிங் சட்டப்படி குற்றம் என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 


* பிற மாணவர்கள் இதுபோன்ற ராகிங் கொடுமைகள் குறித்து 24x7 கட்டணமில்லா எண்ணான 1800-180-5522 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். 


* அதேபோல helpline@antiragging.in என்ற இ- மெயில் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம்.