Chennai Metro Rail: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


தொடர் விடுமுறை:


தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 11,12,13ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து மக்கள் ரயில்கள் மூலமும், பேருந்துகள் மூலமும்  சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள சுமார் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள்,  மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகர் மாநகர பேருந்து நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பேருந்து நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்படுகிறது.


இதனால், சென்னை நகரப் பகுதிகளில் இருந்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். இந்த நிலையில், நவம்பர் 9, 10,11 ஆகிய தேதிகளில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்  அறிவித்துள்ளது.


கூடுதல் மெட்ரோ ரயில்கள்:


இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நெரிசல்மிகு மாலை நேரத்தில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செய்ல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல்மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை நவம்பர் 9 (இன்று), நவம்பர் 10 (வெள்ளிக்கிழமை), நவம்பர் 11 (சனிக்கிழமை)  ஆகிய நாட்களில் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 






நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயங்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை நவம்பர் 9 (இன்று), நவம்பர் 10 (வெள்ளிக்கிழமை), நவம்பர் 11 (சனிக்கிழமை)  ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே என்பதை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 




மேலும் படிக்க


Diwali Special Bus: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கே? எப்போது? எப்படி பயணம் மேற்கொள்ளலாம்?