நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் சில பிரச்சினைகள் அந்த படத்தை சுற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் 2வது முறையாக இணைந்துள்ள படம் “லியோ”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் த்ரிஷா, சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், ஜவஹர் என இந்திய சினிமாவின் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று அவர் பாடிய ‘நா ரெடி’ பாடல், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து , சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டோரின் கேரக்டர் அறிமுகமும் செய்யப்பட்டது.
மேலும் சைமா விருதுகள் விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் கிட்டதட்ட ஒரு மாத காலம் லியோ படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதியில் இருந்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போஸ்டர்கள் வெளியாகி ட்ரெண்டானது. அதேசமயம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெறும் என படக்குழு தெரிவித்திருந்தது.
விஜய் இதில் என்ன மாதிரியான அரசியல் பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், திடீரென இசை வெளியீட்டு விழா நடைபெறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், “நிகழ்ச்சியில் பங்கேற்க அளவுக்கதிகமாக பாஸ் கேட்டு கோரிக்கைகள் வந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்டுகள் வெளியிட்டு உங்களை உற்சாகப்படுத்துவோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரிலீசுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் அப்படம் வெளியாவதிலும், அப்படியே ரிலீசானாலும் வசூலை அள்ளுவதிலும் சிக்கல் இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
- கேரளாவை பொறுத்தவரை விஜய்க்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது மலையாள திரையுலகினரே ஒத்துக் கொள்வார்கள். ஆனால் லியோ படத்தின் போஸ்டர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியானதே தவிர மலையாளத்தில் வெளியாகாதது பல கேள்விகளை எழுப்பியது. மேலும் சில நாட்களாக #BoycottLeo என்ற ஹேஸ்டேக் மலையாள ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் முன்னணி நடிகர் மோகன்லாலை விஜய் ரசிகர்கள் விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததே ஆகும்.
- தமிழ்நாட்டை பொறுத்தவரை பக்காவாக லியோ பட ப்ரோமோஷன்கள் நடைபெற்றாலும், இங்கு காலை 5 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதியளிக்க அரசு உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டது. அதேசமயம் 9 மணி சிறப்பு காட்சியும் இருக்காது என கூறப்படுகிறது. ஏற்கனவே இசை வெளியிட்டு விழா ரத்து என்ற சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இது மேலும் அதிர்ச்சியாக இருக்கும்.
- கர்நாடகாவை பொறுத்தவரை தற்போது காவிரி விவகாரம் மிகப்பெரிய அளவில் பிரச்சினையை கிளப்பியுள்ளது. இதனால் தமிழ் படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என தெரியாத சூழல் நிலவுகிறது.
- ஆந்திராவை பொறுத்தவரை லியோவுக்கு போட்டியாக பாலகிருஷ்ணாவின் பகவாந்த் கேசரி படமும், ரவிதேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் படமும் ரிலீசாவதால் கடும் போட்டி நிலவுகிறது.
- இந்தி திரையுலகை பொறுத்தவரை விஜய்யின் மார்க்கெட் இப்போது தான் ஏற்றம் கண்டு வருகிறது. ஆனால் படத்திற்கு சரியான ப்ரோமோஷன் இருந்தால் மட்டும் தான் அங்கு எடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.