தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (21.1.2025) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்‌ லக்ஷ்மி வளர்தமிழ்‌ நூலகம்‌ மற்றும்‌ அய்யன்‌ திருவள்ளுவர்‌ திருவுருவச் சிலை ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில்‌ முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை:

’’தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால்‌ தமிழ்நாட்டில்‌ உயர்கல்வித்‌ தரமும்‌, அடிப்படைக்‌ கட்டமைப்பு வசதிகளும்‌ மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அதனால்தான்‌, இன்று இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசுப்‌ பல்கலைக்கழகங்கள்‌ உள்ள மாநிலமாக, ஐந்நூற்றுக்கும்‌ மேற்பட்ட தரம்‌ வாய்ந்த பொறியியல்‌ கல்லூரிகள்‌ இருக்கும்‌ மாநிலமாக, அதிக அளவிலான மருத்துவக்‌ கல்லூரிகள்‌ இருக்கும்‌ மாநிலமாக, புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில்‌ 31 உயர்கல்வி நிறுவனங்கள்‌ இருக்கும்‌ மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது.

உயர் கல்வியில்‌ உன்னதமான இடம்

உயர்கல்வி மாணவர்‌ சேர்க்கையில்‌ தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக 49 விழுக்காடு பெற்று இந்திய அளவில்‌ தமிழ்நாடு முதலிடம்‌ பெற்றிருக்கிறது. இப்படி உயர் கல்வியில்‌ உன்னதமான இடத்தை தமிழ்நாடு பெற்று வருகிறது.

அதனால்தான்‌ பல்கலைக்கழகங்களின்‌ நிர்வாகம்‌, மாநில அரசின்‌ முழு கட்டுப்பாட்டில்‌ இருக்கவேண்டும்‌ - வேந்தர்‌ பதவியில்‌, மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்‌ இருக்க வேண்டும்‌ என்று சொல்கிறோம்‌.

பார்த்துப்‌ பார்த்துத்‌ திட்டங்களை உருவாக்கிச்‌ செலவு செய்வது

பள்ளி முதல்‌ உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும்‌ பார்த்துப்‌ பார்த்துத்‌ திட்டங்களை உருவாக்கிச்‌ செலவு செய்வது மாநில அரசு!

பேராசியர்கள்‌ உள்ளிட்ட அனைவருக்கும்‌ சம்பளம்‌ கொடுப்பது மாநில அரசு! பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான உட்‌ கட்டமைப்பு வசதிகள்‌ எற்படுத்தி தருவது மாநில அரசு!

ஆனால்‌, வேந்தர்‌ பதவி மட்டும்‌, ஒன்றிய அரசால்‌ நியமிக்கப்பட்டவருக்கா? அதுதான்‌ நம்முடைய கேள்வி. அதனால்தான்‌ சட்டப் போராட்டம்‌ உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறோம்‌!

சட்டப் போராட்டங்களும்‌ - அரசியல்‌ போராட்டங்களும்‌ தொடரும்‌

மாநிலத்தின்‌ கல்வி உரிமையை மீட்கும்‌ வரைக்கும்‌ இந்தச்‌ சட்டப் போராட்டங்களும்‌ - அரசியல்‌ போராட்டங்களும்‌ தொடரும்‌’’.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, துணை வேந்தர் நியமனம், கற்றல், கற்பித்தல், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அம்சங்களில் யுஜிசி வரைவறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.