அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் இன்று (ஆக.25) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விரிவு படுத்தப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முதல்வர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தால், சுமார் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்திற்காக நன்றி தெரிவிக்கும் வகையிலான ட்வீட்டுகள், இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.


முன்னதாக, தமிழ்நாட்டில்‌ உள்ள 38 மாவட்டங்களில்‌ இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 417 மாநகராட்சி பள்ளிகளில்‌ 43,681 மாணவர்கள்‌, 163 நகராட்சி பள்ளிகளில்‌ 17,427 மாணவர்கள்‌, 728 வட்டாரம்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி பள்ளிகளில்‌ 42,826 மாணவர்கள்‌, 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில்‌ 10,161 மாணவர்கள்‌, என மொத்தம்‌ 1545 பள்ளிகளில்‌ தொடங்கப்பட்டது. இதன்மூல, 114,095 மாணவர்கள்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டத்தில்‌ பயன்பெற்று வருகின்றனர்‌.





மேலும்‌, 28.02.2023 முதல்‌ இத்திட்டம்‌ மேலும்‌ நீட்டிக்கப்பட்டு முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்ட செயலியின்‌ படி 1,005 நகர்ப்புற மையங்களில்‌ 112,883 குழந்தைகளும்‌, 963 கிராமப்புற மையங்களில்‌ 41,225 குழந்தைகளும்‌ பயனடைந்து வருகின்றனர்‌.


திட்டத்தின் நோக்கம் என்ன?


* மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கூடம் வர வேண்டும், 
* ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படக்கூடாது, 
* ரத்த சோகை என்ற குறைபாட்டை நீக்க வேண்டும், 
* மாணவர்களின் வருகைப்ப திவு அதிகரிக்க வேண்டும், 
* வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் ஆகியவை காலை உணவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். 



திட்டம்‌ செயல்படும்‌ முறை


பெருநகர சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள்‌ மற்றும்‌ நகராட்சிகளில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ ஒருங்கிணைந்த சமையற்கூடங்கள்‌ மூலம்‌ பள்ளி சத்துணவு மையங்களை இணைத்து செயல்படுத்தப்பட்‌டு வருகிறது. கிராம ஊராட்சி மற்றும்‌ மலைப்‌ பகுதி மையங்களில்‌ இத்திட்டம்‌ சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி / சுய உதவிக்‌ குழு மூலம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 1,319 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 


உணவு பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்


இந்நிலையில் 31,008 பள்ளிகளில்‌ பயிலும்‌ 17 லட்சம்‌ மாணவர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ரூ.404.41 கோடி செலவில்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியில்‌, 1 முதல்‌ 5ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரே இன்று உணவு பரிமாறினார். தொடர்ந்து அவர்களுடன்‌ கலந்துரையாடியவாறே உணவருந்தினார்‌. 




இதற்கிடையே இத்திட்டத்திற்காக நன்றி தெரிவிக்கும் வகையிலான #ThankYouCMSir என்ற ஹேஷ்டேகைக் கொண்ட ட்வீட்டுகள், இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.


’தமிழ்நாட்டு வகுப்பறைகளில் இனி பசியுடன் எந்தக் குழந்தையும் இருக்காது’, ’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...!’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.