மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகள் மீதான விசாரணையை, அசாம் மாநிலத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






இந்த விசாரணையை மேற்கொள்வதற்கான நீதிபதியை நியமிக்குமாறு, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


சிபிஐ விசாரணை:


மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால், கடந்த மே மாதம் 4ம் தேதி பழங்குடியின பெண்கள் 2 பேர் ஆடைகள் அகற்றப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதோடு, கொடூரமாக தாக்கப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டனர். இந்த சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து,  உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி பெண்கள் தாக்கப்பட்டது தொடர்பான விசாரணையை கடந்த ஜுலை மாதம் 29ம் தேதி சிபிஐ தொடங்கியது.


நீதிமன்றம் உத்தரவு:


இந்நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரித்தது. அப்போது, ”மணிப்பூரில் உள்ள ஒட்டுமொத்த சூழலை கருத்தில் கொண்டு, சிபிஐ பதிந்துள்ள வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றுவதாக உத்தரவிடப்பட்டது. குற்றவியல் நீதி நிர்வாகத்தின் நியாயமான செயல்முறையை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை தேவை. அதோடு இந்த வழக்குகளை கையாள நீதிபதிகளை நியமிக்குமாறு கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி நியமிக்க வேண்டும்.


கட்டாயமில்லை:


குற்றவாளிகளை காவலில் வைக்கப்பது, காவலை நீட்டிப்பது மற்றும் வாரண்டுகளை பிறப்பிப்பது போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை, சிபிஐ இனி கவுகாத்தியில் உள்ள நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்யலாம். அதேநேரம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் அசாம் நீதிமன்றங்களுக்கு நேரடியாக பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாறாக,  மணிப்பூரில் உள்ள தங்களது இருப்பிடங்களில் இருந்தே சாட்சியங்களை வழங்க சுதந்திரம் இருப்பதாகவும்” நீதிபதிகள் தெரிவித்தனர்.


53 பேர் கொண்ட குழு:


பாலியல் வன்கொடுமை சம்பவம் மட்டுமின்றி மணிப்பூரில் நடந்த மற்ற ஆறு வன்முறை வழக்குகள் மற்றும் அரசு ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்குகளை விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மணிப்பூர் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக 53 பேர் கொண்ட சிறப்பு குழுவை சிபிஐ அமைத்துள்ளது. அதில், லவ்லி கட்டியார் மற்றும் நிர்மலா தேவி எனும் எனும் இரண்டு டிஐஜி கேடர் பெண் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இதனிடைய்யே, மணிப்பூரில் மறுகுடியேற்றம் தொடர்பான பணிகளை பார்வையிட, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளான கீதா மிட்டல் தலைமையில்  நீதிபதி ஷாலினி ஜோஷி மற்றும் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.