5, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் இறுதித்தேர்வில் பாஸ் ஆகவேண்டியது கட்டாயம் என்ற வகையில் டெல்லி மாநில அரசு புதிய கொள்கையை அமல்படுத்தி உள்ளது. 


இதுகுறித்து டெல்லி துணை முதல்வரும் கல்வித்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கூறும்போது, ''மத்திய அரசின் அனைவருக்கும் தேர்ச்சி ('no detention' rule) என்னும் கொள்கை முற்போக்கான திட்டம்தான் என்றாலும், போதிய தயாரிப்பின்மை காரணமாக அதன் முழுமையான பலன், கல்வித் துறைக்குக் கிடைக்கவில்லை. இதனால் புதிய கொள்கையை அமல்படுத்தி உள்ளோம். 


இதன்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாணவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்கிறார்களோ அதே முக்கியத்துவத்தை தொடக்கக் கல்வி வகுப்புகளுக்கும் கொண்டுவர வேண்டும் என்று அரசு திட்டமிட்டு வருகிறது'' என்று தெரிவித்தார். 


அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி 


2009ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் மாணவர்கள் 8ஆம் வகுப்பு வரை எந்த பொதுத் தேர்வும் இன்றி தேர்ச்சி பெற்று வருகின்றனர். எனினும் இதனால் கல்வியின் தரம் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 


இந்த நிலையில் 2019ஆம் ஆண்டே, டெல்லி அரசு கட்டாயத் தேர்ச்சித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், ஒரு குழு அமைக்க அனுமதி அளித்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.




இதுகுறித்து மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு நேற்று (வெள்ளிக்கிழமை) புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:


* ஒரு குழந்தையால் 5 அல்லது 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற முடியாதபோது, அந்தக் குழந்தை 2 மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். இதில் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். 


* அதேபோல, முந்தைய மற்றும் ஆண்டு இறுதித் தேர்வுகளில் குறைந்தபட்சம் 25 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 


* இல்லையெனில் அந்தக் குழந்தை "essential repeat" பிரிவில் அமர்த்தப்படும். அடுத்த கல்வி ஆண்டிலும் அதே வகுப்பில் படிக்க வேண்டி இருக்கும். 


* இந்த மதிப்பெண்களுடன் செயல்திட்டம் அடிப்படையிலான செயல்பாடுகள், வருகைப் பதிவேடு, வகுப்பறை பங்கேற்பு, தியேட்டர், நடனம், இசை, விளையாட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படுவார்கள்.


* இந்த செயல்முறைகள் 2023- 24ஆம் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். 


* அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், டெல்லி மாநகராட்சிப் பள்ளிகள், டெல்லி கன்டோன்மென்ட் போர்டு பள்ளிகள் மற்றும் தேசிய தலைநகர் டெல்லி எல்லைக்குள் அங்கீகரிக்கப்பட்ட உதவி பெறாத பள்ளிகளில் இந்த செயல்முறைகள் அமல்படுத்தப்பட உள்ளது. 


இவ்வாறு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.