தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் 10, 12ஆம் வகுப்புத் திருப்புதல் தேர்வில் தொடர்ந்து வினாத்தாள்கள் கசிய, தேர்வுத் துறையின் அலட்சியம் காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது.


தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9-ம் தேதி தொடங்கியது. 10ஆம் வகுப்புக்கு பிப்.9 முதல் இன்று (15ஆம் தேதி) வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாகத் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. 12ஆம் வகுப்புக்கும் காலை, மதியம் இரு வேளைகளிலும் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பொதுத் தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதே பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.


இதற்கிடையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத் தேர்வு நேற்று (பிப்.14) நடைபெற்றது. ஆனால், இந்த பாடத்துக்கான வினாத்தாள் கடந்த 13ஆம் தேதி காலையிலேயே சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அரசு தேர்வுகள் இணை இயக்குநர் குமார், திருவண்ணாமலையில் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்தார்.




நேற்று (பிப்.14) நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான வணிகவியல் தேர்வு வினாத்தாளும் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியானது. சென்னை மாவட்டத்தில் இருந்துதான் இந்த வினாத்தாள் வெளியாகியிருப்பது தெரிய வந்தது. இதனால் திருப்புதல் தேர்வு வினாத்தாள் பள்ளிகளுக்கு முன்கூட்டியே அனுப்பப்படாது. தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்புதான் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


குற்றவியல் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை


அதேபோலப் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 09.02.2022 முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைதளங்களில் வெளிவந்ததாக செய்தி ஊடங்கள் வழியாக அறியப்பட்டதன் அடிப்படையில், துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அந்த ஆய்வில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஹாசினி இண்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி ஆகிய 2 பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணமான பள்ளிகளின் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுத்துறை அளித்த வழிகாட்டுதல்களை பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார். 




இவற்றையெல்லாம் மீறி, 12ஆம் வகுப்பு கணிதப் பாட வினாத்தாளும் உயிரியல் வினாத்தாளும் நேற்று (பிப்.14) கசிந்தது. அதைத் தொடர்ந்து இன்று (பிப்.14)  வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் தேர்வு நடைபெறும் நிலையில், நேற்று இரவில் இருந்தே வணிகக் கணிதவியல் வினாத்தாள் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வகாரம் ஓய்வதற்குள் மீண்டும் இயற்பியல் பாட வினாத்தாள் வெளியானது.


இந்நிலையில் இன்று (பிப்.15) மீண்டும் பள்ளிக் கல்வித்துறை சார்பில், ''திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்படாது. மாணவர்களைப் பொதுத் தேர்வு எழுதத் தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. அடுத்த மாதமும் ஒரு திருப்புதல் தேர்வு மாணவர்களுக்கு நடக்க இருக்கிறது. எனவே பெற்றோர்களும் மாணவர்களும் அச்சப்பட வேண்டாம்.


மூன்று மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. கட்டாயம் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும். அது பாதுகாப்பான நடைமுறையில் இருக்கும்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டது. 


 



அருள்செல்வம்


அதேபோல, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவுக்குத் திருவண்ணாமலை மாவட்டப் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அடுத்தடுத்து எச்சரிக்கை விடுத்தும் முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருவது தேர்வுத் துறை மீதான நம்பகத்தன்மையில் கேள்வி எழுப்பியுள்ளது. துறை அலட்சியமாகச் செயல்படுகிறதா என்றும் அச்சம் எழுந்துள்ளது. 


இதுகுறித்துப் பேசிய பெயர் கூற விரும்பாத தேர்வுத் துறை அலுவலர் ஒருவர், ''ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். அவர்களின் திறனைச் சோதிக்கும் தேர்வில் முறைகேடு என்பது அவர்களின் உழைப்பு வீணாக்குவதற்குச் சமம். அதைத் தேர்வுத்துறை எப்போதுமே ஊக்குவிக்காது. 


இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் நிலையில், தற்போதைய கசிவு, பொதுத்தேர்வில் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதில் துறை கவனமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார். 




திருப்புதல் தேர்வுக்கு இத்தனை முக்கியத்துவம் ஏன்?


இந்த முறைகேட்டை இன்னொரு கோணத்தில் பார்க்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியரும் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (A32) அமைப்பின் பொறுப்பாளருமான உமா மகேஸ்வரி. அவர் கூறும்போது, ''ஏன் திருப்புதல் தேர்வுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அதனால்தான் இந்தத் தவறே நடந்துள்ளது. இதில் உண்மையில் என்ன நடந்தது என்று சந்தேகம் எழுகிறது


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருப்பதால், திருப்புதல் தேர்வு முடிவுகள் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் கணக்கீட்டில் அமைந்துவிடலாம் என்று பள்ளிகள் நினைத்திருக்கலாம். பொதுத்தேர்வு ரிசல்ட் போய்விடக் குடாது என்ற எண்ணத்திலேயே இந்த முறைகேடு நடந்திருக்கலாம். எத்தனை பள்ளிகளில் தேர்வுகள் உண்மையாக நடக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. ஆசிரியர்களிடம் எப்போதுமே கையில் செல்போன் உள்ளது.


பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்துவதற்கான தேர்வுதான் இது என்று இப்போது பள்ளிக் கல்வித்துறை சொன்னாலும், இதற்கு முன்னதாக திருப்புதல் தேர்வுகள் இவ்வாறு நடைபெறவில்லையே?. விடைத்தாளில் மாணவர்கள் தங்களின் பெயர், பள்ளி பெயரை எழுதக்கூடாது. பதிவு எண், வகுப்பு, தேதியை மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது ஏன்? வினாத்தாள்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது ஏன்? இவற்றின்மூலம் பொதுத் தேர்வு மதிப்பீட்டுக்காகவே இந்தத் தேர்வு நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் துறைக்குள்ளும் பள்ளிகளுக்கும் ஏற்பட்டது. 




மதிப்பெண் சார்ந்த கல்வி முறை 


இது பொதுத்தேர்வாகக் கருத்தில் கொள்ளப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை முதலிலேயே தெளிவுபடுத்தி இருக்கலாம். மதிப்பெண் சார்ந்து நம்முடைய கல்வி முறை இருப்பதால், எப்படியாவது நன்றாகத் தேர்வெழுத வைக்க வேண்டும் என்று எந்த எல்லைக்கும் செல்கிறார்கள். 


அண்மைக் காலங்களில் நடைபெறும் அனைத்துத் தேர்வுகளின் வினாத்தாள்களும் விடைத்தாள்களும் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் அநாமதேயமாக வெளியாகின்றன. பள்ளிக் கல்வித்துறை குறித்த அறிவிப்புகள், அரசாணைகள் பள்ளிகளுக்கும் ஏன் சம்பந்தப்பட்ட துறைக்குச் சென்று சேர்வதற்கு முன்னதாகவே, வாட்ஸப்பில் பகிரப்பட்டு விடுகின்றன. நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் பெருகி வரும் சூழலில், பள்ளிக் கல்வித்துறை சார்ந்த தொழில்நுட்ப முறைகேடுகளைத் தடுப்பது குறித்த தெளிவான வரையறைகளும் வழிகாட்டல்களும் அரசால் வெளியிடப்பட வேண்டும். 


 



ஆசிரியை உமா மகேஸ்வரி


ஆசிரியர்களுக்கும் பொறுப்பு அவசியம்


அதேபோல பள்ளியில் வினாத்தாள் முறைகேடு நடந்திருந்தால், அது தலைமை ஆசிரியருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், ஆசிரியர்கள் தங்களை பொறுப்பை உணர வேண்டும். பின்னர் சுய கட்டுப்பாட்டுடனும் கூடுதல் அற உணர்வுடனும் நடக்க வேண்டியது அவசியம்'' என்று ஆசிரியை உமா மகேஸ்வரி தெரிவித்தார்.


மாறிவரும் காலகட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை தன்னுடைய மாணவர் மதிப்பீட்டு முறை, தேர்வுத்தாள் வடிவமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசர, அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.