2025 ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம் நாளை (ஜூன் 12) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளதாவது:
’’குழந்தைப் பருவம், ஒவ்வொருவருக்கும் எற்படும் மகத்தான வாழ்க்கை நிலை. துள்ளிக் குதிக்கவும், உலகைப் பார்த்து வியக்கவும், ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஆராயவும், அனைவரும் முயலும் அரிய பருவமே குழந்தைப் பருவம். குழந்தைகளை மிகப் பெரிய பேறு என்று கருதியதால்தான் வள்ளுவர் மழலைகளுக்காக ஓர் அதிகாரத்தையே ஒதுக்கினார். மழலைகளின் குரல்கள் யாழையும்,குழலையும் மிஞ்சுவன என்று பாராட்டினார்.
குழந்தைகள் விளையாடியும், கலந்துரையாடியும், கதை பேசியும் களிக்கவேண்டிய பருவத்தில், அவர்களைப் பள்ளிகளில் இருந்து பிரித்தெடுத்து, பட்டறைகளுக்கு அனுப்புவது மாபெரும் குற்றம்; அவர்களின் குழந்தைத் தனத்தைத் திருடும் பாதகம். குழந்தைகள் பள்ளிகளுக்குப் படிப்பதற்கு மட்டும் செல்வதில்லை. சக குழந்தைகளோடு பூக்களை ரசிப்பதற்கும், புன்னகைகளைப் படர விடுவவதற்கும், பூமியின் உயிர்த் துடிப்பை உணர்வதற்கும்தான்.
கற்றுக்கொள்ள மட்டுமல்ல; உற்றுநோக்கவும் பள்ளிகளே அவர்களுக்கு நாற்றங்கால்களாக இருக்கின்றன.
குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, குழந்தைகளின் குழந்தைத்தனத்தைத் திருடி, துடிப்புமிக்க அவர்கள் பார்வையை மங்கியதாக மாற்றி, துள்ளுகின்ற அவர்களைத் துவள்கிறவர்களாக்கி, பாடத்தை ஏந்த வேண்டிய அவர்கள் கைகளில், பணிக் கருவிகளைத் தாங்கும் சூழ்நிலையை உருவாக்கி, அவர்கள் சிறகுகளைக் கத்தரித்து, பணியிடம் என்கின்ற சிறையில் அடைப்பது மிகப் பெரிய கொடுமை.
குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றுவது அவர்களுக்கு அளிக்கப்படுகிற மிகப் பெரிய விடுதலை, வாழ்நாள் பரிசு. தமிழ்நாடு அரசு அதனைத் தன் தலையாய கடமையாகக் கருதி விழிப்புணர்வை விதைத்துக் கொண்டு வருகிறது. மாபெரும் இயக்கமாக இது ஓங்கி வளர்ந்திருப்பதால், குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலமாக முன்னேறியிருக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்பதே அரசின் இலக்கு.
குழந்தைகள் செம்மையாகப் படிக்க, கட்டணமில்லா கல்வி, கைகளில் தவழும் பாடப் புத்தகங்கள்; எழுதிப் பழக நோட்டுப் புத்தகங்கள்; அவையனைத்தையும் வைக்க புத்தகப் பை; அணிந்து மகிழ சீருடை; பசியின்றிப் படிக்க காலைச் சிற்றுண்டியும்; மதிய உணவும் வசதியாய் நடக்கக் காலணி; அசதியின்றி பயணிக்கப் பேருந்து அட்டை; ஓட்டிப் பழக மிதிவண்டி என்று உதவிகளை இரண்டு கைகளாலும் அள்ளி அள்ளி வழங்குகிறது தமிழ்நாடு அரசு. படிப்பு சுமையாக இல்லாமல், சுகமாக மாறவே இத்தனை நலத் திட்டங்கள்.
தமிழ்நாடு அரசு வகுக்கும் திட்டங்களை, அரசுத் துறைகள் செயல்படுத்துவதோடு, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிட நிறுவனங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று விரும்புகிறோம். அரசு சாரா நிறுவனங்களும், உள்ளாட்சி அமைப்புகளும், தொழிற்சங்கங்களும், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களும் ஒரே குரலில் ஓங்கி ஒலித்தால், குழந்தைத் தொழிலாளர் இல்லாத குவலயம் போற்றும் ஒளிமிகு தமிழ்நாடு உருவாகும்.
அதை நோக்கி அனைவரும் ஒன்றாகப் பயணிப்போம்’’
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.