அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் இயக்கத்தில், ரன்பீர் கபூர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள திரைப்படம் அனிமல்.


முன்னதாக ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரன்பீர் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. 


அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு தாண்டி அனைத்து மொழிகளிலும் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப். இப்படம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு தெலுங்கு தாண்டி எப்படி பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்ததோ அதே அளவுக்கு இப்படத்தின் இயக்குநர் சந்தீப்புக்கும் பெற்று தந்தது. 


இந்நிலையில் அர்ஜூன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங்கை இந்தியில் சந்தீப் இயக்கினார். இப்படமும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், ரன்பீர் கபூரை வைத்து அனிமல் படத்தை இயக்குவதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது.


தொடர்ந்து இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அனிமல் படத்தின் ப்ரீ டீசர் வெளியாகியுள்ளது.


 



பஞ்சாபி பாடல் பின்னணியில் ஒலிக்க, ரத்தம் சொட்ட சொட்ட கேங்ஸ்டர்களை ரன்பீர் பந்தாடும் வகையில் இப்படத்தின் ப்ரீ டீசர் அமைந்துள்ளது. மேலும் ரன்பீர் கபூரின் முகம் இந்த டீசரில் காண்பிக்கப்படாத நிலையில், விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நிலையில், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.


ஆக்‌சன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக உள்ளதாக முன்னதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி அனிமல் படம் ஏற்கெனவே திட்டமிட்டபடி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பாலிவுட்டில் லவ்வர் பாயாக அறிமுகமான ரன்பீர் கபூர் தன் சினிமா பயணத்தில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஆக்‌ஷன் ரோலில் நடித்திராத நிலையில், இந்தப் படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். 


ரன்பீர் கபீர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான தூ ஜூட்டி மெய்ன் மக்கர் படம் 100 கோடிகளுக்கும் மேல் வசூலைக் குவித்து சாதனை படைத்தது. சென்ற ஆண்டு ரன்பீர் தன் மனைவி அலியா பட் உடன் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரா படமும் பெரும் ஹிட் அடித்து, சென்ற ஆண்டு அதிகம் வசூலித்த பாலிவுட் படம் எனும் சாதனையைப் படைத்தது.  இந்நிலையில் இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 


மேலும் படிக்க: 30 Years Of Jurassic Park: வாழ்க்கை அதன் வழியை கண்டறியும்... மிரட்டிய டைனோசர்கள்... ஜூராசிக் பார்க் வெளியான தினம் இன்று!