தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை தமிழ்நாடு இரண்டு முறை தவறவிட்டுள்ளதாகவும் அதற்கு திமுக தான் காரணம் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்


சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா பேசி வருகிறார். அதில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமராவதை இழந்துள்ளோம். தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை தமிழகம் இரண்டு முறை தவறவிட்டுள்ளதாகவும், அதற்கு திமுக தான் காரணம் என்றும் அவர் கூறினார். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என்றும் கூறினார். பாஜக வெற்றிக்கு உழைக்கும்படி தென் சென்னை தொகுதி பாஜக பொறுப்பாளர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தினார். 


தொடர்ந்து அமித்ஷா பேசியதாவது:


300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக மீண்டும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் ஏழை குடும்பத்தில் இருந்து முதல்வர், பிரதமர் வர வேண்டும். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தின் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு அனைத்து தொகுதியிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்த வேண்டும். தென்சென்னை தொகுதியில் எஞ்சியிருக்கும் 40% பூத் கமிட்டியை வேகமாக முடிக்க பாஜக நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை  பாஜக நிர்வாகிகள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார்.