முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 1 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகை பெற மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில்‌ உயர்கல்வியை மேம்படுத்தும்‌ நோக்கில்‌ முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர முனைவர் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவித்தொகை


இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் கலைப் பிரிவில் 60 மாணவர்கள், அறிவியல் பிரிவில் 60 மாணவர்கள் என மொத்தம் 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஆராய்ச்சிப் படிப்புக்கான உதவியாக மாதந்தோறும் ரூ.25,000 வீதமும், எதிர்பாரா செலவினங்களுக்காக கலைப்பிரிவு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ரூ.12,000 வீதம் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறத் தகுதியுடைய மாணவர்கள் போட்டித்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நிலையில், முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 1 லட்ச ரூபாய் கல்வி உதவித் தொகை பெற மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பு:


’’முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கு வட சென்னை மாவட்டத்தைச் சார்ந்த முழு நேர, பகுதி நேர ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.1,00,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


அதனைத் தொடர்ந்து ஆராய்ச்சி பயிலும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டதற்கான இருப்பிட சான்று முதலியவற்றுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் வட சென்னை, மாவட்ட ஆட்சியரக வளாகம், சென்னை என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம்’’.


இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே சார்பில் கூறப்பட்டுள்ளது.