மிக்ஜாம் புயல் வெள்ளம் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்யும் வகையில், சென்னையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வரும் 4 சனிக்கிழமைகளில் செயல்பட உள்ளன என்று சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 


மிக்ஜாம் புயல் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி வட கடலோர தமிழக மாவட்டங்களில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளாகின. தொடர்ச்சியாகப் பெய்த கன மழையால் சென்னை மாநகரமே முடங்கியது. பிறகு சென்னையில் மழை இல்லாத சூழலில், தண்ணீர் மெதுவாக வடிந்தது. பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றது. பலரும் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்தனர். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தண்ணீரில் தத்தளித்தனர். 


இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்தவர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. 4 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 


தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டன. டிசம்பர் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை, ஒரு வார காலத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கற்றல் இழப்பு ஏற்பட்டது. 


இந்த நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில், சென்னையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வரும் 4 சனிக்கிழமைகளில் செயல்பட உள்ளன என்று சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஜனவரி 6, 20 ஆகிய தேதிகளிலும் பிப்ரவரி 3, 17 ஆகிய தேதிகளிலும் அனைத்து வகையான பள்ளிகளும் இயங்க உள்ளன.