கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். 


எங்கெல்லாம் விடுமுறை?


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது. விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் அரை நாள் பள்ளி செயல்படுகிறது.


புதுச்சேரி, காரைக்காலில் ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. வட கிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கையாகவும் கன மழை பெய்து வருவதாலும் இந்த அறிவிப்பு வெளியானது.


அதேபோல சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (அக்.16) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்


இந்த நிலையில் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட சில பள்ளிகளில், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இவற்றை ஒத்திவைக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.






கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் குறிப்பிட்டுள்ளார்.