DY CM Udhay: கொட்டும் மழைக்கு மத்தியில் துணை முதலமைச்சர் ஸ்டாலின் நள்ளிரவில் சென்னையில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த ஆண்டை போல மழை பாதிப்பு இருக்காது என உறுதி அளித்தார்.


”கடந்தாண்டை போல பாதிப்பு இருக்காது” -உதயநிதி


சென்னையில் ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பல இடங்களில் ஆய்வு செய்தேன். பெரும்பாலான இடங்களிலும் மழைநீர் வடிந்துள்ளது. இன்னும் மழை வந்தாலும், எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். கடந்த வருடம் என்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் வந்ததோ, அது எதுவுமே இந்த வருடம் வராத அளவில் தீர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என துணை முதலமச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி:


துணை முதலமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முதலமைச்சரரின் வழிகாட்டுதலின்படி, பள்ளிக்கரணை மற்றும் கோவிலம்பாக்கம் இடையே உள்ள நாராயணபுரம் ஏரியின் கரையோரத்தில் ஆய்வு செய்தோம். நாராயணபுரம் ஏரியின் கரைப்பகுதி பலப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து ஆய்வு செய்து, மழை நீர் ஏரிக்கு வந்து சேருகிற வழித்தடங்கள் தூர்வாரப்பட்டுள்ள விதம், கரைகளின் தன்மை உள்ளிட்டவைக் குறித்து அதிகாரிகள் – அலுவலர்களிடம் கேட்டறிந்தோம்.






நாராயணபுரம் ஏரிக்கு, கீழ்க்கட்டளை ஏரியில் இருந்து உபரிநீர் வரும் கால்வாயை அம்பேத்கர் சாலையில் இருந்து ஆய்வு செய்தோம். அப்பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகள் – கருத்துக்களைப் பெற்றோம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினோம்” என குறிப்பிட்டுள்ளார்.


பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு:


இதேபோன்று கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜி.பி.சாலை மற்றும் மயிலை முசிறி சுப்பிரமணியம் சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வழியாக மழைநீர் வடிகின்ற விதத்தை துணை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது பணிகள் குறித்து கேட்டறிந்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், கொட்டும் மழையிலும் பணியில் ஈடுபட்டு இருந்த, மாநகராட்சி அதிகாரிகளுக்கு சிற்றுண்டி வழங்கு ஊக்குவித்தார்.