Chennai Bomb Threat Latest News: சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தது விவகாரத்தில், வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரைக் கொண்ட முகவரியில் இருந்து இ- மெயில் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. 


சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர் ஒருவர், மின்னஞ்சல் மூலம் இன்று (பிப்.7) வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோபாலபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோல சாந்தோம், பெரம்பூர், பூந்தமல்லி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை நடத்தினர்.


9 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு


பள்ளி நிர்வாகத்தினர் குறுஞ்செய்தி அனுப்பியதை அடுத்து, பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இதற்கிடையே யாரும் பயப்பட வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின இதுகுறித்துத் தனித்தனியாக 9 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


சென்னையில் அண்ணா நகர், ஜெ.ஜெ. நகர், பட்டினப்பாக்கம், நந்தம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரைக் கொண்ட முகவரி


துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்தவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இமெயில் எந்த ஐ.பி. முகவரி கொண்ட கணினியில், எந்தப் பகுதியில் இருந்து வந்துள்ளது என்பதை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் சட்டம் ஒழுங்கு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரைக் கொண்ட முகவரியில் இருந்து இ- மெயில் வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே வழக்கு சென்னை மத்தியக் குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்படுவதாக காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


முன்னதாக, அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே இ- மெயில் முகவரியில் இருந்து மிரட்டல் வந்ததாக சென்னை காவல் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேற்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்:  Chennai Bomb Threat: பரபரப்பு… சென்னையில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- காவல்துறை சோதனை