Chennai Bomb Threat News Today: சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.


கோபாலபுரம், ஜெ.ஜெ.நகர், ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சாந்தோம், பெரம்பூர், பூந்தமல்லி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் காவல் துறையினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.





பள்ளி நிர்வாகத்தினர் குறுஞ்செய்தி அனுப்பியதை அடுத்து, பெற்றோர்கள் வந்து தங்களின் குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர். இதற்கிடையே யாரும் பயப்பட வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 




முன்னதாக இதுகுறித்து பள்ளி நிர்வாகம், பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது. அதில் பள்ளிகள் இன்று 1 மணியுடன் முடிவடைவதாகவும் பள்ளி போக்குவரத்து இருக்காது என்பதால், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து, பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று வருகின்றனர்.  


மக்கள் பீதியடைய வேண்டாம்






இதற்கிடையே பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’’சென்னை மாநாகராட்சி எல்லைக்குள் செயல்படும் சில கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய இ- மெயில்கள் வந்துள்ளன. மெயிலில் குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மோப்ப நாய்கள் அடங்கிய குழுவினர் விரைந்துள்ளனர். இ- மெயில்களை அனுப்பிய குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


அதனால் பொது மக்கள் யாரும் அச்சம்கொள்ள வேண்டாம்’’ என்று சென்னை மாநகராட்சி காவல்துறை தெரிவித்துள்ளது.


இதற்கிடையே 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.