செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் முதல் முறையாக கல்லூரிக்கு செல்லும் நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கல்வி என்ற ஆயுதம் 


கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதமாக இருந்து வருகிறது.‌ ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு குழந்தைகளும், கல்வி கற்பது என்பது அவசியமாகி வருகிறது. அரசு சார்பிலும் கல்வி கற்பது குறித்த அவசியங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். இருந்தும் இந்த காலகட்டத்திலும் ஒரு சில இடங்களில், இருக்கும் பொது மக்களுக்கு முறையான கல்வி கிடைப்பது கிடையாது. 




அவ்வாறு இருக்கும் மக்களை தேடி கண்டுபிடித்து சமூக நல ஆர்வலர்களும் அரசும் இணைந்து கல்வி அறிவை வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி முதல்முறையாக பட்டம் படிக்க சென்று இருக்கும் நிகழ்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


முதல் முறையாய் கல்லூரி நோக்கி


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் பெரிய இரும்பேடு கிராமத்தில் இருளர் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர் விஜயன் தீபா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் பெரிய மகள் நதியா கடந்தாண்டு பிளஸ் டூ முடித்து தற்போது செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் படிக்க தகுதி கிடைத்த நிலையில் அரசு கலைக் கல்லூரிக்குச் முதலாம் ஆண்டு சேர சென்றார்.


 




செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் நதியா படிக்க உள்ளார். இந்நிலையில் பழங்குடி இருளர் இன பகுதியைச் சேர்ந்த இருளர் பழங்குடி இன மக்கள் மற்றும் உறவினர்கள் நதியாவிற்கு மாலையிட்டு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்து கல்லூரிக்கு வழி அனுப்பி வைத்தனர்.





பொதுமக்களுக்கு சேவை செய்ய...


 


இதுகுறித்து கல்லூரிக்குச் சென்ற மாணவி நதியா மற்றும் அவர்களின் பெற்றோரிடம் கேட்டபோது, அரசியல் அறிவியல் மூன்றாண்டுகள் படித்து முடித்த பின்னர் அரசு பணிக்கான தேர்வுகளை எழுதி அரசு பணியில் சேர்ந்து பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே குறிக்கோளாக இருப்பதாக தெரிவித்தார் .


இதுகுறித்த பகுதி மக்கள் கூறுகையில், “நாங்கள் வாழ்வதே மிகப்பெரிய போராட்டமாக இருந்து வருகிறது. அடிப்படை வசதிகள் கூட எங்களுக்கு முறையாக கிடைப்பது கிடையாது. இருந்தும் எங்கள் குழந்தைகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஒருபுறம் படிப்பு முக்கியம் என்றாலும் அதைவிட முக்கியம் அடிப்பது வசதிதான்.‌ முறையாக மின்சார வசதி கூட இல்லாத இந்த பகுதியிலிருந்து, முதல்முறையாக நதியா கல்லூரிக்கு செல்வது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது” எனத் தெரிவித்தனர்.