மாணவச் செல்வங்களின் வாழ்க்கையோடு விளையாடுவதா?- எடப்பாடி பழனிசாமி
இந்திய நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். நிபந்தனைகளின் அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சிக்கு நிதி தரமுடியும் என்று கூறுவது ஏற்கக்கூடியதல்ல.
மாணவச் செல்வங்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரசியல், சட்ட அழுத்தங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்: அன்புமணி
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையையோ, 3, 5 மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்குத் தேவையான அரசியல் மற்றும் சட்ட அழுத்தங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கடும் பொருளாதார, நிர்வாக நெருக்கடியில் தமிழக அரசு: செல்வப்பெருந்தகை
ஒன்றிய அரசு மாநிலங்களிடையே திணித்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்க மறுத்து வருகிறது. ஒன்றிய அரசு உடனடியாக நிதியை விடுவிக்குமாறு பலமுறை கடிதங்கள் மாநில அரசால் எழுதப்பட்டது. இதனால் 8 லட்சம் மாணவர்கள் படிக்கிற மாநில கல்வித்துறை கடும் பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
ஏறத்தாழ 15,000 ஆசிரியர்களுக்கு வருகிற மாதத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவிகித ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேருகிற ஏழை,எளிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கை தயாரிப்பதற்கு முன்பாக மாநில அரசுகளை கலந்தாலோசிக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் மாநில அரசுகளை கலந்துதான் ஒன்றிய அரசு முடிவெடுக்க வேண்டும்.
ஆனால், புதிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளை, பன்முகத்தன்மையை உதாசீனப்படுத்துகிற வகையில் அமைந்துள்ளது. அரசு பள்ளிகளை பலகீனப்படுத்தி, கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்திய கருத்தியலான வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பல்வேறு கலாச்சார பண்பாடுகளை ஏற்க மறுக்கிற வகையில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்போடு தயாரிக்கப்பபட்ட புதிய கல்விக் கொள்கை இருப்பதால் தமிழ்நாடு அதனை கடுமையாக எதிர்க்கிறது. ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கண்டித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பாக உடனடியாக நிதியை விடுவிக்குமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.