மத்திய அரசு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படும் தமிழக அரசிடம் பாரபட்சம் காட்டுவதாகவும் எல்லோரிடமும் ஆரோக்கியமான அணுகுமுறை அவசியம் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார். இதன்படி, 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகின்றன. 10ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 28ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி வரை நடைபெறுகின்றன. அதேபோல 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு - மார்ச் மாதம் 5ம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 27ம் தேதி வரை நடக்கிறது.


கோயம்புத்தூரில் பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:


’’எந்தத் தடை வந்தாலும் முதலமைச்சர் பார்த்துக் கொள்வார். ரூ.573 கோடி முதல் தவணை நிதியே இன்னும் வராமல் இருக்கிறது. இதனால், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் 32,298 பேருக்கு ஊதியம் அளிக்க முடியவில்லை. அதை இன்னும் மத்திய அரசு அளிக்காத சூழலில், மாநில நிதியில் இருந்து பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி உள்ளோம். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து நிதியை நிறுத்தி வைக்கக்கூடாது என்னும் வலியுறுத்தலையும் அழுத்தத்தையும் தொடர்ந்து முன்வைக்கிறோம்.


27 வகையான பயன்பாடுகளுக்கு சிக்கல்


மாதாமாதம் துறைச் செயலாளரை டெல்லியில் சந்தித்து வலியுறுத்திக் கொண்டேதான் இருக்கிறோம். சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின்மூலம் 27 வகையான பயன்பாடுகள் செய்யப்படுகின்றன. மலைப் பிரதேசங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல எஸ்கார்ட் முறை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு எஸ்எஸ்ஏ நிதியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எண்ணும் எழுத்தும் திட்டம், ஹைடெக் ஆய்வகம், சிறப்புக் குழந்தைகளுக்கான திட்டம், கலைப் பண்பாட்டுத் திட்டம் என ஏராளமான திட்டங்கள், எஸ்எஸ்ஏ நிதி மூலம் 60:40 என்ற விகிதத்தில் பயன்பாட்டில் உள்ளன.


ஆனால் திடீரென இந்த நிதியில் கை வைக்கிறார்கள். தமிழகப் பள்ளிக் கல்வித்துறை சிறப்பாகச் செயல்படவில்லை, அதனால் கை வைக்கிறோம் என்றார்களா? இத்தனைக்கும் இந்தியாவிலேயே உயர் கல்வி மாணவர் சேர்க்கை மொத்த சராசரியைவிடத் தமிழ்நாட்டில் அதிகம். 62 சதவீதம் வந்துவிட்டதாகக் கூட சொல்கிறார்கள். மத்திய அரசின் 20 விதமான மதிப்பீடுகளில் சுமார் 18 அளவுகோல்களில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது.


நிதியில் கை வைக்கிறார்கள்


நம்மைப் பார்த்து, பிற மாநிலங்கள் கற்றுக்கொள்கிறோம் என்பதுதான் ஆரோக்கியமான அணுகுமுறையாக இருக்கும். ஆனால் சம்பந்தமே இல்லாமல், சிறப்பாகச் செயலாற்றும் மாநிலத்துக்கு, சில கொள்கைகளைப் பின்பற்றினால்தான் நிதி தருவோம் என்பது எப்படி நியாயம் ஆகும்? பள்ளிக் கல்வித் துறைக்குதான் அதிக நிதியை தமிழ்நாடு முதல்வர் ஒதுக்குகிறார். அடுத்த தலைமுறையை உருவாக்கும் நம் துறையை, மாநில அரசு என்றுமே கைவிடாது’’.  


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.