2021ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வை ஆஃப்லைன் முறையோடு ஆன்லைன் முறையிலும் நடத்த வேண்டும் என்று சுமார் 8 ஆயிரம் பெற்றோர்கள், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வலியுறுத்தி உள்ளனர்.
இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஒமிக்ரான் தொற்று பாதிப்பைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே 2021ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்வை ஆஃப்லைன் முறையோடு ஆன்லைன் முறையிலும் நடத்த வேண்டும் என்று சுமார் 8 ஆயிரம் பெற்றோர்கள், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்துப் பெற்றோர்கள் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் நாடு முழுவதும் பெற்றோர்கள் மற்றும் இளம் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசும் உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழிமுறைகளை வெளியிட்டுள்ளன.
இந்த சூழலில் நேரடியாக மாணவர்களை அழைத்துப் பொதுத் தேர்வுகளை நடத்துவது மருத்துவ சீரழிவை உருவாக்கும். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களை அபாயத்தில் தள்ளும்.
"மாணவர்கள் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொண்டோரில் 3 முதல் 4 சதவீதம் பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். பண்டிகை காலம் மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்படும் நேரடித் தேர்வுகளால் கோவிட் வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நேரடியாக மட்டுமே தேர்வு நடத்தப்பட்டால் பெருந்தொற்று வேகம் பன்மடங்கு அதிகரிக்கக் கூடும்.
ஆன்லைன் வழியாகக் கற்றல் நடத்தப்பட்டபோது தேர்வு மதிப்பீட்டையும் ஆன்லைனிலேயே நடத்துவதுதான் முறையாக இருக்கக்கூடும். சிபிஎஸ்இ கொள்கையின் அடிப்படையில், பெற்றோரின் அனுமதியைப் பெற்றே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். ஆனால் தேர்வுகளுக்கும் இதே விதிமுறை பொருந்தாதா?
சிபிஎஸ்இ தன்னுடைய மாணவர்களை மதிப்பிடும்போது, அவர்கள் வாழ்வது மற்றும் உடன்நலனுக்கான உரிமையே பிரதானமாக இருக்க வேண்டும். இன்னும் சில மாநிலங்கள் தீவிரமான கரோனா தொற்றுடனேயே இருக்கின்றன. இதனால் இந்தியா முழுவதும் நேரடியாக ஆஃப்லைன் முறையில் பொதுத்தேர்வு நடத்துவது என்பது தற்போதைய கரோனா விதிமுறைகளை மீறுவதாகவே அமையும். அதனால் 2021ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வை ஆஃப்லைன் முறையோடு ஆன்லைன் முறையிலும் நடத்த வேண்டும்."
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.