ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வரும் நிலையில், நாட்டின் பல்வேறு நகரங்களில் ஜி-20 அமைச்சர்கள் கூட்டம் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு, அடுத்த மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. இது, உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ஜி-20 அமைப்பு:


இந்த நிலையில், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதிலும், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதிலும் இந்தியா உலகிற்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜெய்சங்கரிடம், காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் வளர்ந்த நாடுகளின் பங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய அவர், "பிரசங்கம் செய்பவர்கள், அதை நடைமுறைப்படுத்த மாட்டார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.


"வளர்ந்த நாடுகள் பேசுறாங்களே தவிர, செயல் எதுவும் செய்றதில்லை"


இந்தியா தனது செயல்களின் மூலம் உலக நாடுகளை முன்னோக்கி அழைத்து செல்லும் வழியைக் காட்ட வேண்டியிருந்தது. நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நம் செயல்களால், உலகிற்கு வழிகாட்ட வேண்டும். மேடைகளில் விவாதிக்க வேண்டும். ஆனால், மக்கள் அளித்த வாக்குறுதிகளில் இருந்து (பேச்சுக் கடைகளில்) பின்வாங்கினால் நாம் சங்கடப்பட வேண்டியிருக்கும். உலகளாவிய தெற்கின் குரலாக இருப்பது எங்கள் பொறுப்பு.


நாங்கள் 125 நாடுகளுக்குச் சென்று அவர்களிடம் ஜி20 விவகாரங்கள் குறித்து கேட்டுள்ளோம். காலநிலை பிரச்னை மோசமாகி வருகிறது. இது தனியாம் சம்பவம் அல்ல. காலநிலை பேரழிவுகள் தொடர்ந்து நிகழ்கிறது. பெரும் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்துகின்றன. காலநிலை மாற்றங்களால் விநியோகச் சங்கிலிகள் தடைபட்டால், உங்கள் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஆபத்து ஏற்படும்" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள மோதல் (உக்ரைன் போர்) எரிபொருள், உணவு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பொருளாதார விளைவுகளுடன் கூடிய காலநிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. உலகின் நிலைமை முன்னெப்போதையும் விட மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.


ஜி-20 என்பது உணவு-ஆற்றல்-காலநிலை பற்றியது. நமது அன்றாட வாழ்க்கை முறையை மாற்றி, பருவநிலைக்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டுவராத வரையில், எதுவும் மாறாது. நாங்கள் மக்கள் பங்கேற்பை இலக்காகக் கொண்டுள்ளோம். இது எங்கள் கூட்டுப் பொறுப்பு, இதுவே எங்களின் மெசேஜ்.


ஜி20 மாநாட்டை அரங்கு மற்றும் டெல்லியை தாண்டி நாடு முழுவதும் கொண்டு செல்ல பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். ஆனால் சாமானியர்களுக்கு, அரசியல் என்பது ஒரு தொலைதூர விஷயம். அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய பிரச்சினைகளை ஜி20 அமைப்பில் எழுப்ப அரசாங்கம் முயற்சிக்கிறது" என்றார்.