பள்ளி பாடப்புத்தக்கத்தில் டேட்டிங், உறவுகள் பற்றிய பாடம் அச்சடிக்கப்பட்டு உள்ளதாக வெளியான தகவலுக்கு சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்விக்கான புத்தகங்களை அறிமுகப்படுத்தியதாகவும் அதில் டேட்டிங் மற்றும் உறவுகள் பற்றிய பாடங்கள் உள்ளதாகவும் தகவல் வெளியானது.


அதேபோல காரணமே சொல்லாமல் ஒருவருடனான உறவைத் திடீரெனத் துண்டிப்பது (Ghosting), ஒருவரைக் கவர சமூக வலைதளங்களில் போலியாக இயங்குவது (Catfishing) மற்றும் ஒருவருக்கு மோசமான, எதிர்மறையான, தவறான கருத்துகளை/ உள்ளடக்கங்களை அனுப்புவது (Cyberbullying) போன்ற அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் எளிய எடுத்துக்காட்டுகள் மூலம் விதிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.


டேட்டிங் விதிமுறைகள் குறித்த வழிகாட்டல்






எக்ஸ் தள பயனாளர் ஒருவர் தனது கருத்தினை புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில், ’’இளம் வயது என்பது உணர்ச்சிகளால் நம் மனதையும் இதயத்தையும் அடிக்கடி குழப்பும் பருவம். இப்படியான பருவத்தில் மாணவர்களுக்கு வெவ்வேறு டேட்டிங் விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது’’ என கூறி இருந்தார்.   



இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேரக் குவிந்தன. சிபிஎஸ்இ முன்னெடுப்பைப் பாராட்டியும் விமர்சித்தும் கமெண்ட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், சிபிஎஸ்இ இதற்கு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிபிஎஸ்இ, ’’ஊடகங்களில் டேட்டிங் குறித்தும் உறவுகள் பற்றியும் சிபிஎஸ்இ தனது புத்தகங்களில் அச்சிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவை எதிலுமே உண்மையில்லை.






தனியார் பதிப்பாளர்களின் புத்தகங்களே


சமூக வலைதளங்களில் வைரலான செய்தி அடங்கிய புத்தகம் ககன் தீப் கவுரால் எழுதப்பட்டு, ஜி.ராம் புக்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தால் அச்சடிக்கப்பட்டது. சிபிஎஸ்இ தனியார் பதிப்பாளர்களின் புத்தகங்களை வெளியிடவில்லை. பரிந்துரை செய்யவும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் டேட்டிங் மற்றும் உறவுகள் குறித்த பாடப்புத்தக விளக்கம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


சிபிஎஸ்இ அவ்வப்போது தனது பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இவை அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.