12ஆம் வகுப்பு கணிதப்பாடத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 


பொதுத் தேர்வுகள் தொடக்கம்


2022- 2023ஆம்‌ கல்வியாண்டிற்கான பத்தாம்‌ வகுப்பு, 12ஆம் வகுப்புப் பொதுத்‌ தேர்வுகள்‌ மார்ச்‌ மற்றும்‌ ஏப்ரல்‌ மாதங்களில்‌ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 10ஆம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பொதுத் தேர்வுகளை‌ மொத்தம் 27.30 இலட்சம்‌ மாணவர்கள்‌ எழுத உள்ளனர்‌.


மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வுகள்‌ 13.03.2023 அன்று தொடங்கின. இந்தத் தேர்வுகள் 03.04.2023 வரை நடைபெறவுள்ளன. இத்தேர்வினை 7600 பள்ளிகளில்‌ பயிலும்‌ 8.80 இலட்சம்‌ பள்ளி மாணவர்கள்‌ 3169 தேர்வு மையங்களில்‌ எழுதி வருகின்றனர்‌.






 

நேற்று கணிதப் பாடம்




இந்த நிலையில், 12ஆம் வகுப்பு கணிதத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 12ஆம் வகுப்பு கணிதப்பாடத்தில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:


''தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத் திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்பு கணிதப் பாடத் தேர்வில்  கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள்  தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை கணித ஆசிரியர்களும் உறுதி செய்திருக்கின்றனர்!


கணிதப் பாடத் தேர்வில் குறைந்தது 3 வினாக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திலிருந்து (சி.பி.எஸ்.இ) கேட்கப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்ட நூல்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால் முழு மதிப்பெண்களை  எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது நியாயமல்ல!


கணிதத்தில் 100% மதிப்பெண் பெறுவதுதான் மாணவர்களின் இலக்கு. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் படித்தால்தான் 100% மதிப்பெண் எடுக்க முடியும் என்பது அறமல்ல. வினாத்தாள் தயாரிப்புக் குழுவினர்  அவர்களின் திறமையை காட்டுவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கக் கூடாது!


12-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து தமிழக அரசின் தேர்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும். மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களுக்கு உரிய அளவில்  கூடுதல் மதிப்பெண்கள்  வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''.


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.