2021 சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு வாரியத் தேர்வுகள் நடத்துவது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் தெரிவித்தார்.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. மனுதாரர் தனது மனுவில், " சிபிஎஸ்இ தவிர்த்து, இதர மாநிலங்களின் 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் நடத்துவது குறித்தும், அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
கடந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கவிருந்த 12ஆம் வகுப்புக்களுக்கான தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்தது. மதிப்பீடு திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. சிபிஎஸ்இ பரிந்துரைத்த மதிப்பெண் திட்ட அடிப்படையில், மாணவர்கள் உயர்க்கல்வி நிறுவனங்ககளில் விண்ணப்பித்து சேர்க்கை பெற்றனர்.
இதற்கிடையே, 2021 கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், மே 4ஆம் தேதி முதல் 2021 ஜூன் 10ஆம் தேதி வரை நடக்கும் எனவும், தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சர் 2019 டிசம்பர் 31ம் தேதி அறிவித்தார். ஆனால், மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. தினசரி பாதிப்புகளும், இறப்புகளும் ஒட்டு மொத்த நாட்டையே நிலைகுழைய செய்தது. இதனையடுத்து, 2021 சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 12ம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாகும் மத்தியக் கல்வி அமைச்சர் அறிவித்தார்.
Class 12 Board Exams: பிளஸ் 2 தேர்வு வேண்டுமா, வேண்டாமா? மாநிலங்கள் பரிந்துரைக்க வேண்டுகோள்!
இந்நிலையில், வழக்கறிஞர் மம்தா சர்மா என்பவர் இந்தாண்டும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், பாரபட்சமற்ற பொறிமுறைகள் (Neutral Mechanisms) மூலம் தேர்வு முடிவுகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அறிவிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அடங்கிய விடுமுறை கால அமர்வு இன்று வழக்கை விசாரித்தனர். விசாரணையின் போது, "கடந்தாண்டு பின்பற்றிய அதே வழிமுறைகளை ஏன் தற்போது மீண்டும் பின்பற்ற கூடாது" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பின்பற்ற முடியாத காரணத்தை முறைப்படி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினர்.
இதற்குப் பதிலளித்த தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், " மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை மனதில் கொண்டு இன்மும் 2 நாட்களில் சிறந்த முடிவுகளை மத்திய அரசு அறிவிக்கும்" என்று தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலும், வாசிக்க:
12ம் வகுப்புத் தேர்வுகள் தொடர்பாக சிபிஎஸ்இ முன்வைத்த முக்கிய 2 ஆலோசனை