பிளஸ் 2  பொது தேர்வுகள் நடத்துவது குறித்து மாநிலங்கள் நாளைக்குள் (மே 25) பரிந்துரைகளை வழங்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 


அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம், நேற்று நடத்தியது. சிபிஎஸ்இ மற்றும் இதர மாநிலங்களின் 12ம் வகுப்பு வாரியத்  தேர்வுகள் நடத்துவது குறித்தும், அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


கூட்டத்தில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், "மாணவர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலன்களை உறுதி செய்ய ஒட்டு மொத்த நாடும் ஒன்றாக இணைவது அவசியம் என்றும் தெரிவித்தார்". 



சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்டது,  ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் 12ம் வகுப்பு தேர்வு முக்கியம் என்றும் அமைச்சர் கூறினார்  


மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், தங்கள் கருத்துக்களை கல்வி அமைச்சகத்துக்கு நாளைக்குள் தெரிவிக்கும்படி மத்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அனைத்து தரப்பு  ஆலோசனைகளின் முடிவில் ,12ம் வகுப்புக்கு தேர்வு நடத்தும் விஷயத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சகம் விரைவில் இறுதி முடிவு எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது .


இந்த கூட்டத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர்  ரமேஷ் பொக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள்  மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ஸ்மிருதி இரானி, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கல்வித்துறை இணையமைச்சர் சஞ்ஜே தோத்ரே, உயர் கல்வித்துறை செயலாளர் அமித் காரே, பள்ளி கல்வித்துறை செயலாளர் அனிதா கர்வால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



தமிழக அரசின் நிலைப்பாடு: நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவித்தனர். 


12ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் தேர்வு முறைகள் குறித்து தமிழக அரசின் இறுதி நிலைப்பாட்டை முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசிற்கு தெரிவிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


தமிழகத்திற்கு நீட் (NEET) தேர்வு கூடாது என்றும், வழக்கம் போல பிளஸ் 2 இறுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் தமிழக உயரக்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இந்த கல்வியாண்டில், தமிழகத்தில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், 12ம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.