சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், பாரபட்சமற்ற பொறிமுறை மூலம் தேர்வு முடிவுகளை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அறிவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் மே 31ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


வழக்கறிஞர் மம்தா சர்மா என்பவர் தாக்கல் செய்த இந்த பொது நல வழக்கை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அடங்கிய விடுமுறை கால அமர்வு இன்று விசாரதித்தது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய பள்ளி வாரியங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


சிபிஎஸ்இ தவிர்த்து, இதர மாநிலங்களின் 12ம் வகுப்பு வாரியத்  தேர்வுகள் நடத்துவது குறித்தும், அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் முறையிட்டார்.  


கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, சிபிஎஸ்இ 10ம் வகுப்பு வாரியத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, மேலும், 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. 


இந்தியாவில், பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதால், 12ம் வகுப்பு பொதுத் தேவுகள் நடத்துவது குறித்து 2 முக்கிய ஆலோசனைகளை சிபிஎஸ்இ மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அளித்தது. முதலாவது விருப்பத்தின் கீழ், சிபிஎஸ்இ ஒத்துக்கீடு செய்யும் தேர்வு அறைகளில், முக்கியமான 15 பாடங்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இதர பாடங்களுக்கு மதிப்பீடு வழங்கப்படும். 


இரண்டவாது விருப்பத்தின் கீழ், பிரத்தியோக தேர்வு அறைகள் இல்லாமல், அந்தந்த பள்ளிகளில் 1½ மணி நேரம் நடைபெறும் வகையில் பாடங்களுக்கு குறுகிய தேர்வுகள் நடத்தப்படும். 



முன்னதாக, கடந்த 21ம் தேதி பிரதமர் தலைமையில், 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் மற்றும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்த உயர்நிலைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் முக்கிய மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


அதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் நடத்தியது. இதில், 12ம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்துவது குறித்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் மே 25 ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும்  என்று  மத்திய அரசு  மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. 


கிட்டத்தட்ட, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது குறித்த தங்களது பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.             


டெல்லி, மகாராஷ்டிரா,அந்தமான& நிகோபார், கோவா ஆகிய நான்கு மாநிலங்கள்/ யூனியன் பிரேதேசங்கள், பேனா- பேப்பர் முறையில்  சிபிஎஸ்இ பொதுத் தேர்வை நடத்த வேண்டாம் என்று தெரிவித்திருக்கின்றன. 



தெலுங்கான,ராஜஸ்தான்,திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்கள் சிபிஎஸ்இ பரிந்துரைத்த முதல் விருப்பத்தின் கீழ் தேர்வுகள் நடத்தாலாம் என்றும், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 28 மாநிலங்கள் இரண்டாவது விருப்பத்தின் கீழ் பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்றும் பரிந்துரைகளை வழங்கியுள்ளன. எனவே, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூன் 1ம் தேதிக்குள் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.        


இந்த கல்வியாண்டில், தமிழகத்தில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், 12ம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.