மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி முடிவடைகின்றன. அதேபோல 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 12ஆம் வகுப்புக்கான தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரையிலும், சில தேர்வுகள் 1.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகள் ஜனவரி 2, 2023 முதல் தொடங்க உள்ளன. கேள்வித் தாளை வாசித்துப் பார்ப்பதற்காக மாணவர்களுக்கு 15 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ஓவியம் உள்ளிட்ட கலை படிப்புடன் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 24ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப் பாடங்கள் நடக்கின்றன. 27ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 1, 2ஆம் தேதிகளிலும் பல்வேறு மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடக்க உள்ளது.
மார்ச் 4ஆம் தேதி அறிவியல் பாடத் தேர்வும் மார்ச் 15-ல் சமூக அறிவியல் தேர்வும் நடக்கின்றன. மார்ச் 21ஆம் தேதி கணிதப் பாடத்துடன் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிகின்றன.
12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை
பிப்ரவரி 15ஆம் தேதி தொழில் முனைவோர் பாடத்துடன் பொதுத் தேர்வு தொடங்குகிறது. அதையடுத்து, பயோடெக்னாலஜி, பொறியியல் வரைபடம், மின்னணு தொழில்நுட்பம், சுருக்கெழுத்து, உணவு ஊட்டச்சத்து உள்ளிட்ட தேர்வுகள் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற உள்ளன. ஏப்ரல் 5ஆம் தேதி உளவியல் பாடத்துடன் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிகிறது.
சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சன்யம் பரத்வாஜ் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். தேர்வுகளுக்கு இடையே போதுமான இடைவெளி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முழுமையான அட்டவணையைக் காண: https://www.cbse.gov.in/cbsenew/documents//Date_Sheet_Session_2022_23_29122022.pdf
கல்லூரி நுழைவுத் தேர்வுகளான நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்டவற்றுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ விரைந்து தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சிபிஎஸ்இ பொதுத் தேர்வு தேதிகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: TNPSC Result: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 4 உள்ளிட்ட 15 வகைத் தேர்வுகள், முடிவுகள் எப்போது?- முழு அட்டவணை இதோ..!