Raangi Movie Review: ஏ.ஆர் முருகதாஸ் கதை எழுத, 'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்தின் இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ராங்கி. லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு சத்யா இசை அமைத்துள்ளார்; கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதையின் கரு:
நடிகை த்ரிஷா, தையல் நாயகி கதாபாத்திரத்தில் துணிச்சல்மிக்க பத்திரிகையாளராக நடித்துள்ளார். போலி ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தி ஆண்களுடன் நெருக்கமாக பேசி வருகிறார் ஒரு பெண். அந்த போலி கணக்கின் ப்ரொஃபைல் பிக்சரில் த்ரிஷாவின் அண்ணன் மகளின் புகைப்படம் வைக்கப்படுகிறது. அந்த பெண் பேசி வந்த ஆண்களில் ஒருவன் வெளிநாட்டு தீவிரவாதி. இந்த விஷயம் நாயகி த்ரிஷாவின் பார்வைக்கு வர, அண்ணன் மகள் சுஸ்மிதாவை பிரச்சினையில் இருந்து மீட்க தீவிரவாதியுடன் சாட் செய்யத் தொடங்குகிறார். அப்போது ஏற்படும் திருப்பங்களின் தொகுப்பே ராங்கி திரைப்படத்தின் கதை. ராங்கி திரைப்படம் ரசிக்க வைத்ததா.. சலிக்க வைத்ததா என்பதை பார்ப்போம்
ராங்கி என்ற டைட்டிலுக்கு ஏற்றார் போல் த்ரிஷாவின் ராவான நடிப்பு, வசனங்கள் அனைத்தும் அட்டகாசம். சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்த நடிகை என்பதை நடிப்பிலும் வெளிப்படுத்தியுள்ளார் த்ரிஷா. கதாநாயகன் காலம் போய் இது 'கதாநாயகி காலம்' என்பதை மீண்டும் பதிவு செய்துள்ளது இந்த வுமன்சென்ட்ரிக் திரைப்படம்.
அரசியல், டெக்னாலஜி, காதல் என மூன்று வெவ்வேறு விஷயங்களை ஒன்றாக இணைத்து பார்வையாளர்களுக்கு சேர்க்க வேண்டிய கருத்தை மிக அழகாகவும், ஆழமாகவும் பதிவு செய்துள்ளார் இயக்குநர்.
முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது. கிசுகிசு எழுதுவது தான் ஜர்னலிஸமா? என நம் நாட்டின் பத்திரிகை துறையை கேள்வி எழுப்புவதாக அமைந்திருந்தது; கூடவே அரசியலையும் படத்தில் கடுமையாக விமர்சித்து இருந்தார்கள்.
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களால் ஏற்படும் ஆபத்தை இத்திரைப்படம் சுட்டிக்காட்டியுள்ளது. பள்ளிக் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சமூக வலைதளங்களை பயன்படுத்தி செய்யும் குற்றங்கள் மற்றும் அவற்றின் தாக்கத்தை விவரித்தது முதல் பாதி.
காதல், பயம், தீவிரவாதம் என த்ரில்லிங்காக இருந்தது இரண்டாம் பாதி. மென்மையான காதல் வழியே, ஒரு ஆழமான அரசியலை கடத்திச் சென்றுள்ள விதம் சிறப்பு. ஒரு சாமானியன் சந்தர்ப்ப சூழ்நிலையால், எப்படி தீவிரவாதத்தில் ஈடுபடுகிறான் என்பதையும், தீவிரவாதியின் உணர்வுகளையும் மிக நுட்பமாக காட்சிப்படுத்தி இருந்தார் இயக்குநர். சமகால பிரச்சினைகளாகிய டெக்னாலஜி, உருவ கேலி போன்றவற்றை பேசி, அதன் வழியே நெடுங்கால அரசியல் பிரச்சினையை மக்களுக்கு போர் அடிக்காமல் கடத்தியது சிறப்பு; முருகதாஸின் கதைக்கு உயிரூட்டியுள்ளது இயக்குநர் சரவணனின் வசனங்கள்.
''தீவிரமாக அரசியல் செய்பவன் அரசியல்வாதி.. தீவிரமாக போராடுபவன் தீவிரவாதி!'' ''ஜெயிச்சா தான் நாம போராளிகள்..தோத்தா தீவிரவாதிகள்!'' என நெத்தியடி அடித்தாற்போல் படத்தின் வசனங்கள் அல்டிமேட்.
தீவிரவாதியாக ஆலிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரின் நடிப்பு சிறப்பு.
பாலைவனத்தில் பூத்த ரோஜா போல போராளியின் ( தீவிரவாதி என அழைக்கப்படுபவன்) காதல் மெய் சிலிர்க்க வைத்தது. படத்தில் பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் காதல் மலரும் தருணத்தில் வரும் ஒற்றை பாடலில் ஆடியன்ஸின் அப்லாஸை பெற்றுவிட்டார் இசையமைப்பாளர் சத்யா.
"எனது நாட்டில் வளங்கள் இல்லாமல் இருந்திருந்தால், நானும் எனது நாட்டுத் தலைவனும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க மாட்டோம். உனது நாட்டிலும் வளங்கள் உள்ளது, ஜாக்கிரதையாக இரு" என்ற ஆலிமின் இறுதி வார்த்தைகள் அவனது காதலி சுஸ்மிதாவுக்கு மட்டுமல்ல நமக்கும்தான். மொத்தத்தில், ராங்கி திரைப்படம் ரசிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைக்கும்.