பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து 87.33 ஆக உள்ளது. அதேபோல சென்னை மண்டலத்தில் 97.4 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர். 


12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத 16 லட்சத்து 96 ஆயிரத்து 349 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 15,079 பள்ளிகளில் 6714 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு மையத்துக்கும் தனித்தனியாக தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 115 பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் 16,60,511 மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் 14, 50,174 மாணவர்கள் தேர்வான நிலையில் தேர்ச்சி விகிதம் 87.33 ஆகக் குறைந்துள்ளது. 


கேரளா முதலிடம்


12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளில் முதல் இடத்தைக் கேரளா பெற்றுள்ளது. திருவனந்தபுர மண்டல மாணவர்கள் 99.91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாவது இடத்தில், பெங்களூரு மண்டலத்தில் 98.64 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலம் 97.4 சதவீத தேர்ச்சியோடு 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 



அதேபோல அலகாபாத் என்று அழைக்கப்பட்ட பிரயாக்ராஜ் மண்டலத்தில் (உத்தரப் பிரதேசம்) மிகக் குறைவான தேர்ச்சி விகிதம் பதிவாகி உள்ளது. அங்கு மாணவர்கள் 78.05 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல டேராடூன் மண்டலத்தில் 80.26 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர். 


தேர்ச்சி விகிதம் குறைவு


கடந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.  முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் மற்றும் அக மதிப்பீட்டு மதிப்பெண்கள் மூலம் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. இதனால் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. 99.37 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். 


ஆண்டுவாரியாகத் தேர்ச்சி விகிதம்:










  • 2023- 87.33 சதவீதம்

  • 2022- 92.71 சதவீதம்

  • 2021- 99.04 சதவீதம்

  • 2020- 91.46 சதவீதம்

  • 2019- 91.10 சதவீதம்

  • 2018- 86.7 சதவீதம்

  • 2017- 93.12 சதவீதம்


தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?


மாணவர்கள் https://testservices.nic.in/cbseresults/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm என்ற இணைப்பை க்ளிக் செய்தும் தேர்வு முடிவுகளைக் காணலாம். அதில் மாணவர்களின் பதிவு எண், பள்ளி எண், நுழைவுச் சீட்டு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காணலாம். 


https://cnr.nic.in/cbseresults/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm 


https://cbseresults.nic.in/class_xii_2023/ClassTwelfth_c_2023.htm


தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட இணைய தள முகவரிகளை க்ளிக் செய்தும், 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காணலாம். 


இதையும் வாசிக்கலாம்: Free Coaching: மக்களே... ரயில்வே, வங்கி உள்ளிட்ட மத்திய அரசுத் தேர்வுகள்; 100 நாள் இலவச சிறப்புப் பயிற்சி- பங்கேற்பது எப்படி?