முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் தேர்வுக்கு (2022) விண்ணப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கேட் 2022 விண்ணப்பப்பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆக இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேட் நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள ஐஐஎம்கள் மற்றும் பிசினஸ் பள்ளிகளில் மேலாண்மைப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது.
குறிப்பாக அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் உள்ள ஐஐஎம்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
என்ன தகுதி?
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான சிஜிபிஏவைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் இட ஒதுக்கீட்டின்கீழ் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிலையில் ,முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் தேர்வுக்கு (2022) விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆக இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கேட் 2022-க்கான அனுமதிச் சீட்டை அக்டோபர் 27 முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு முடிவுகள் 2023ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CAT 2022 விண்ணப்பப் படிவத்துடன் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* பாஸ்ட்போர்ட் அளவு புகைப்படங்கள்
* கையெழுத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
* சாதிச் சான்றிதழ்
* படிப்பு விவரங்கள்
* சரியான இ-மெயில் முகவரி
* மொபைல் எண்
கேட் 2022-ன் தேர்வு மையங்களாக 6 நகரங்கள் வரை விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்
ரூ.2,300
ரூ.1,150 ( தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு)
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் iimcat.ac.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://cdn.digialm.com//per/g01/pub/756/ASM/WebPortal/19/PDF/CAT_2022_Information_Bulletin.pdf
Also Read: TNPSC : தமிழ்நாடு சிறைப் பணிகள்.. காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?