பிஎஸ்சி நர்சிங், பி.ஃபார்ம். உள்ளிட்ட 19 துணை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது.
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி., பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுக்கு இன்று (ஜூன் 28) கடைசி தேதியாக இருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
என்னென்ன படிப்புகள்?
துணை மருத்துவப் படிப்புகளில் நர்ஸிங் படிப்பு, பி.எஸ்சி. படிப்புகளில் ரேடியோதெரபி, ரேடியாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, க்ரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ரெஸ்பிரேட்டரி தெரபி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி உள்ளிட்ட ஏராளமான பிரிவுகள் உள்ளன. அதேபோல ஃபார்மஸி படிப்பும் படிக்கலாம். எக்கோ கார்டியோ கிராபி, கீமோ டயாலிசிஸ் ஆகியவற்றில் டெக்னீஷியன் படிப்பை முடித்தால் முறையே இதய நிபுணர், சிறுநீரக நிபுணர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றலாம்.மயக்க மருந்தியல், ஆய்வகவியல், தியேட்டர் உதவியாளர், இசிஜி, ரேடியாலஜி, லேபராட்டரி டெக்னாலஜி ஆகியவற்றில் டிப்ளமோ படிப்பும் படிக்கலாம்.
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட இடங்களும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 14 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் சேர, இணைய வழியில் 66,696 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியான நிலையில், பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவ, மாணவிகள் இன்று (ஆக.14ஆம் தேதி) காலை 10 மணி முதல் 18ஆம் தேதி மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in அல்லது www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, கல்லூரிகளில் தேவையான இடங்களைத் தேர்வு செய்யலாம்.
கல்லூரியில் சேர ஆகஸ்ட் 28ஆம் தேதி கடைசி
தரவரிசைப் பட்டியல் அடிப்படையில், கல்லூரிகளில் இடங்கள் ஆக.21ஆம் தேதி அன்று ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்த நாள் முதல் இட ஒதுக்கீட்டு ஆணையை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் 28-ம் தேதி மாலை 5 மணி அல்லது அதற்கு முன்பாக சேர வேண்டும் என்று தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது. 1 முதல் 24327 வரை ரேங்க் பெற்ற மாணவர்கள் இந்தக் கலந்தாய்வில் சேரலாம். அதேபோல 200 முதல் 160 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களை மாணவர்கள் www.tnhealth.tn.gov.in அல்லது www.tnmedicalselection.org இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.