படுக்கை செயல்திறன் சரியில்லை என்பதால், 13 ஆசிரியர்களின் சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளதாக பிஹார் மாநிலக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement


எங்காவது படுக்கை செயல் திறனுக்காக பள்ளி ஆசிரியர்கள் தண்டிக்கப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிஹார் மாநிலத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.


பிஹார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், மே 22ஆம் தேதி திடீரென பல்வேறு பள்ளிகளில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது நிறைய ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் இருந்தது தெரிய வந்தது. அதேபோல பெரும்பாலான ஆசிரியர்களின் செயல்திறன் சரியில்லாமல் இருந்ததும் தெரிய வந்தது.


ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை


இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். வட்டாரக் கல்வி அலுவலர் இதுகுறித்து, ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினார். அதில், மோசமான செயல்பாடுகளுக்காக ( Bad performance ) சம்பந்தப்பட்டவர்களின் ஊதியம் பிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, படுக்கை செயல்பாடுகளுக்காக ( bed performance ) ஊதியம் பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பான சுற்றறிக்கை வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அங்குள்ள ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளன.


அதேபோல மற்றொரு சுற்றறிக்கையில், பள்ளிகளின் பெயர்கள் இருக்கவேண்டிய இடத்தில், ஆசிரியர்களின் பெயர்களும் ஆசிரியர்களின் பெயர் இருக்கவேண்டிய இடத்தில் பள்ளிகளின் பெயர்களும் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




வட்டாரக் கல்வி அலுவலகம் விளக்கம்


Bad performance என்னும் வார்த்தை தவறுதலாக Bed performance என்று குறிப்பிடப்பட்டு விட்டதாகவும் இது, தட்டச்சு செய்யும்போது ஏற்பட்ட பிழை மட்டுமே எனவும் வட்டாரக் கல்வி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.


எனினும் இதை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள், பிஹார் மாநிலத்தின் கல்வித் தரத்தையும் கல்வி அதிகாரிகளையும் விமர்சித்து வருகின்றனர்.