பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனமான Smallest AI, ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியத்தில் முழுநேர பொறியாளராகப் பணியாற்ற ஆட்கள் தேவை என்று அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை, ஏன் ரெஸ்யூமே தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிறுவனத்தின் சமூக வலைதள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வருங்காலத்தில் ஏஐ தொடர்பான வேலைவாய்ப்புகளுக்கே வரவேற்பும் தேவையும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே Smallest AI என்ற பெயரில் பெங்களூருவில் ஸ்டார்ட் அப் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் சுதர்சன் காமத் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் முழு நேர பொறியாளர் (cracked full-stack engineer) தேவை என்று தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 40 லட்ச ரூபாய் ஊதியம்
தேர்வு செய்யப்படும் நபருக்கு ஆண்டுக்கு 40 லட்ச ரூபாய் ஊதியம் தரப்படும் என்றும், பேசிக் பே ஆண்டுக்கு ரூ.15- ரூ.25 லட்சம், ஊழியர்களுக்கான நிறுவன பங்குகள் ஆண்டுக்கு ரூ.10 – ரூ.15 லட்சம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பணி அனுபவம் தேவையில்லை
மேலும் 0 முதல் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம், எந்தக் கல்லூரியாக இருந்தாலும் பிரச்சினை இல்லை எனவும் சுதர்சன் தெரிவித்து இருந்தார்.
ரெஸ்யூமே தேவையில்லை
எல்லாவற்றையும்விட ஆச்சரியப்படுத்தும் விதமாக இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ரெஸ்யூமே தேவையில்லை என்றும் 100 வார்த்தைகள் அடங்கிய சுய விவரக் குறிப்பு மற்றும் தங்களின் சிறந்த பணிக்கான இணைப்பு ஆகியவற்றைச் சமர்ப்பித்தால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பான பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சுதர்சன் காமத் விளக்கம்
தற்போது இதுபற்றி விளக்கம் அளித்துள்ள சுதர்சன் காமத், ’’இப்படித்தான் இவ்வளவு நாட்களாக நாங்கள் ஊழியர்களைத் தேர்வு செய்கிறோம். இதுமட்டும் வைரலானது ஏன் என்று தெரியவில்லை. எங்களின் குழுவில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தலைசிறந்த கல்லூரிகளில் இருந்து வந்தவர்கள் இல்லை. ஆனாலும் நான் சந்தித்ததிலேயே ஸ்மார்ட் ஆகப் பணிபுரிபவர்கள் அவர்கள்.
எங்கள் குழுவில் கல்லூரியில் இடைநின்றவர்களும் முன்னாள் தொழில்முனைவோர்களும்கூட உள்ளனர். புத்திசாலித்தனம் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்’’ என்று பதிவிட்டுள்ளார்.