அரசுப் பள்ளிகளில் சேர டிவி, ஃப்ளக்ஸ், ஆட்டோ, துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவை மூலம் விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 2022- 23ஆம்‌ கல்வியாண்டில்‌ மாணவர்‌ சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். 


அதில் கூறப்பட்டுள்ளதாவது:


''அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கு நலத்திட்டங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வுப் பேரணி நடத்த வேண்டும். 


* விழிப்புணர்வுப் பேரணி மற்றும்‌ பிரச்சாரமானது பொது மக்கள்‌ அதிகமாகக் கூடும்‌ இடங்களில்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌.


* மக்கள்‌ கூட்டம்‌ அதிகம்‌ உள்ள இடங்கள்‌ மற்றும்‌ மக்கள்‌ குடியிருப்புகள்‌ அதிகம்‌ உள்ள இடங்கள்‌ இவற்றில்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்தப்பட வேண்டும்‌.


* அனைத்து ஆசிரியர்களையும்‌ கொண்டு விழிப்புணர்வுப் பிரச்சாரம்‌ மேற்கொள்ள வேண்டும்‌.


* பள்ளிகளில்‌ மாணவர்கள்‌ சேர்க்கையினை கோடை விடுமுறை இறுதியில்‌ பள்ளிகள்‌ திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே நடைபெறச்‌ செய்யுமாறு பள்ளியில்‌ உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ அறிவுறுத்த வேண்டும்‌.


* குறிப்பாக ஒற்றை இலக்கத்தில்‌ மாணவர்கள்‌ எண்ணிக்கை உள்ள பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ அர்ப்பணிப்பு உணர்வுடன்‌ பணியாற்றி மாணவர்‌ எண்ணிக்கையை இரட்டை இலக்கத்திற்குக் கட்டாயமாக உயர்த்த அறிவுறுத்த வேண்டும்‌.


* இந்தியாவிலேயே தமிழகம்‌ பள்ளி வயது அனைத்து குழந்தைகளையும்‌ பள்ளிகளில்‌ சேர்த்துவிட்டது என்று பெருமை அடையும்‌ வகையிலும்‌ விரிவான ஏற்பாடுகள்‌ செய்திட வேண்டும்‌.




* பள்ளி அளவிலும்‌, ஊராட்சி அளவிலும்‌, வட்டார அளவிலும்‌, மாவட்ட அளவிலும்‌ ஒரே நேரத்தில்‌ இந்நிகழ்வுகள்‌ நடைபெற வேண்டும்‌. பள்ளி செல்லாக்‌ குழந்தைகளின்‌ பெற்றோர்களை இனம்‌ கண்டு, அவர்களையும்‌ அழைத்து அறிவுரைகள்‌ வழங்கிப்‌ பேரணியில்‌ இடம்‌ பெறச்‌ செய்ய வேண்டும்‌. இப்பேரணிக்காகக்‌ கீழ்க்கண்ட வழிமுறைகளைப்‌ பின்பற்றலாம்‌ எனத்‌ தெரிவிக்கப்படுகிறது.



  • கல்வி தொலைக்காட்சி, TAC TV மற்றும்‌ அனைத்து தனியார்‌ தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம்‌ விழிப்புணர்வு விளம்பரம்‌ செய்தல்‌

  • பேரணி பற்றிய சுவரொட்டிகள்‌

  • வரவேற்பு வளைவுகள்‌

  • துணி விளம்பரங்கள்‌

  • ஆட்டோ / வேன்‌ மூலம்‌ ஒலிபெருக்கி விளம்பரம்‌

  • பேரணி தொடக்க சிறப்புரை.

  • பேரணி முடிவில்‌ சிறப்புக்‌ கூட்டம்‌.

  • துண்டுப் பிரசுர விநியோகம்‌.

  • மாணவர்‌ சேர்க்கை பற்றிய வாசகம்‌ அடங்கிய தட்டிப்‌ பலகைகள்‌.

  • விழிப்புணர்வுப் பாடல்கள்‌.

  • சிறு நாடகங்கள்‌.

  • செய்தித்‌தாள்களில்‌ விளம்பரம்‌.

  • தொலைக்காட்சி / உள்ளூர்‌ கேபிள்‌ தொலைக்காட்சியில்‌ வரி விளம்பரம்‌.

  • ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிப்‌ பொருள்‌ வழங்குதல்‌.

  • தேர்வில்‌ சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்‌.

  • நூறு சதவீதம்‌ குழந்தைகளை அரசுப்‌ பள்ளிக்கு அனுப்பிய கிராமங்களுக்குப் பரிசு வழங்குதல்''‌.


மேலே குறிப்பிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். 


இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.