Asia University Rankings 2023: ஆசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலைக்கழகம், சவீதா பல்கலைக்கழகம் ஆகிய 2 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் இருந்து இடம்பெற்றுள்ளன. ஒரேயோர் ஐஐடி மட்டும், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
டைம்ஸ் உயர் கல்வி சார்பில் ஆசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியல் ( Times Higher Education's (THE) Asia University Rankings) ஆண்டுதோறும் வெளியாகி வருகின்றது. 2023ஆம் ஆண்டுக்கான பட்டியல் அண்மையில் வெளியான நிலையில், சீனாவைச் சேர்ந்த இரண்டு பல்கலைக்கழகங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. (Tsinghua University, Peking University) மூன்றாவது இடத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த தேசியப் பல்கலைக்கழகம் (National University of Singapore) பிடித்துள்ளது.
18 பல்கலைக்கழகங்கள்
முதல் 200 இடங்களில் இந்தியாவில் இருந்து 18 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் 100 இடங்களில் இந்தியாவில் இருந்து 4 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் முதல் 50 இடங்களில் இந்தியாவில் இருந்து ஒரேயொரு பல்கலைக்கழகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதன்படி, ஐஐஎஸ்சி எனப்படும் இந்திய அறிவியல் நிறுவனம் 48ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, 42ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 6 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது. அதேபோல ஜேஎஸ்எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 68ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ஷூலினி பயோடெக்னாலஜி மற்றும் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் 77ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் 95ஆவது இடத்திலும் ஹைதரபாத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 106ஆவது இடத்திலும் உள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து 2 பல்கலைக்கழகங்கள்
அதேபோல காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பா பல்கலைக்கழகமும் சவீதா பல்கலைக்கழகமும் ஆசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அழகப்பா பல்கலைக்கழகம் 111ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சவீதா பல்கலைக்கழகம் 113ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் 128ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஒரேயோர் ஐஐடி மட்டும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதாவது பஞ்சாப்பைச் சேர்ண ஐஐடி ரோபர் 131ஆவது இடத்தில் உள்ளது. டெல்லியைச் சேர்ந்த இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் 137ஆவது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் சரிவைக் கண்ட கல்வி நிறுவனங்கள்
ஆசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியல் முதல் 200 இடங்களில் இந்தியாவில் இருந்து 18 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்று இருந்தாலும், பட்டியலில் அவை சரிவைக் கண்டுள்ளன. தொடர்ந்து 5ஆவது ஆண்டாக (இந்திய அறிவியல் நிறுவனம்) ஐஐஎஸ்சி சரிவைக் கண்டுள்ளது. 2016-ல் 27ஆவது இடத்தில் இருந்த ஐஐஎஸ்சி தற்போது 48 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜேஎஸ்எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 3 இடம் பின் தங்கிய நிலையில், ஐஐடி ரோபர் 63 இடங்கள் பின்னோக்கிச் சென்றுள்ளது. அதே நேரத்தில் ஹைதரபாத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், 174ஆவது இடத்தில் இருந்து 106ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்த டாப் 200 பட்டியலில், முந்தைய ஆண்டுகளில் இடம் பெற்றிருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி காந்திநகர் ஆகிய கல்வி நிறுவனங்கள் இந்த முறை இடம் பெறவில்லை.