முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று இரவு காலமான நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், அதில் உண்மை உள்ளதா என்று காணலாம்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று இரவு 9.51 மணிக்கு காலமானார். 92 வயதான அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் தேசியக் கோடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. கேளிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா?
எனினும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை எதுவும் அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில், கர்நாடகா அரசு இன்று (டிசம்பர் 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. அதேபோல தெலங்கானா அரசும் இன்று அரசு பொது விடுமுறையை அறிவித்து உள்ளது. எனினும் பிற மாநிலங்கள் எந்த விடுமுறையையும் அளிக்கவில்லை.
மன்மோகன் சிங் 1982 முதல் 1985 வரை, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநராக இருந்தபோது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று விகிதத்தை நிலைப்படுத்துவதில் மன்மோகன் சிங் முக்கியப் பங்காற்றினார். அவரின் ஆராய்ச்சி, அரசியல் திறன் மற்றும் கல்வித் திறமை ஆகியவை உலகத்தால் அறியப்பட்டாலும், 1991-ல் பெரும் பொருளாதார நெருக்கடியில் இந்தியாவைக் காப்பாற்றிய நிதியமைச்சராக அவர் நினைவுகூரப்படுவார். அப்போது பி.வி. நரசிம்ம ராவின் கீழ் நிதியமைச்சராக இருந்த சிங், இந்தியாவின் பொருளாதார நெருக்கடியைச் சமாளித்தார். தொடர்ந்து நாட்டின் பிரதமராக 2 முறை பணியாற்றி உள்ளார்.
மன்மோகன் செய்தது என்ன?
2004 இல், சிங் பிரதமரானபோது, 1991 முதல் அவர் செயல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் பலனைத் தரத் தொடங்கின. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2003 இல் இருந்து ஆண்டுதோறும் 8 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியடைந்தது.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மன்மோகன் சிங், சில மாதங்களுக்கு முன்பு ஓய்வுபெற்றார். அவரின் இறுதிச் சடங்குகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.