புதுச்சேரி : சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் வருகிற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். புதுச்சேரியில் என்ஜினீயரிங், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-23ம் கல்வியாண்டிற்கு நீட் தேர்வு அல்லாத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விவரங்கள் அடங்கிய கையேட்டை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கல்வித்துறை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். அதை கல்வித்துறை இயக்குனரும், சென்டாக் ஒருங்கிணைப்பாளருமான ருத்ரகவுடு, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பதிவாளர் சிவராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்டாக் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை இணையதளம் மூலம் இன்று முதல் மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். நீட் தேர்வு அல்லாத தொழில்முறை படிப்புகளான பி.டெக், பி.எஸ்.சி. (விவசாயம், நர்சிங், தோட்டக்கலை, பி.வி.எஸ்.சி, பி.பி.டி., பி.பார்ம், பி.ஏ. எல்.எல்.பி. (5 ஆண்டு சட்டபடிப்பு), பட்டயபடிப்புகள், இளநிலை கலை மற்றும் அறிவியல், வணிகம் மற்றும் படிப்புகள், இளநிலை நுண்கலை படிப்புகளுக்கு சென்டாக் இணையதளம் (www.centacpuducherry.in) விண்ணப்பத்தை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிதற்கான கடைசி நாள் வருகிற 20-ந்தேதி மாலை 5 மணி ஆகும். பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை, கலை, அறிவியல், வணிகம் சார்ந்த படிப்புகளுக்கு மற்ற மாநில ஒதுக்கீட்டின் கீழ் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். வெளிநாடு இந்தியர்கள் தகுதியின் அடிப்படையில் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி மற்றும் பிற மாநில விண்ணப்பதாரர்கள் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளில் சுயநிதி இடஒதுக்கீடுகளுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான முழு விவரங்களையும் சென்டாக் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். நீட் தேர்வு அல்லாத தொழில்முறை படிப்புகளில் 4 ஆயிரத்து 954 இடங்களும், கலை, அறிவியல் படிப்புகளில் 4 ஆயிரத்து 260 இடங்களும், நுண்கலை படிப்புகளில் 90 இடங்களிலும், பி.டெக் 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் 403 இடங்களும், உயிரியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகளில் 190 இடங்கள் என 10 ஆயிரத்து 804 இடங்கள் சென்டாக் மாணவர் சேர்க்கை மூலம் நிரப்பப்பட உள்ளது. தொழில்முறை படிப்புகளில் சேருபவர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்தினால் போதும். கலை அறிவியல் படிப்புகளில் சேர பிற பிரிவினர் ரூ.300-ம், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ரூ.150 செலுத்தினால் போதும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். நீட் தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வுக்கு பின் அறிவிப்பு வெளியிடப்படும் விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் தங்களது பழைய சாதி சான்றிதழை சமர்ப்பித்தால் போதுமானது. குடியிருப்பு சான்றிதழ் பாடப்பிரிவு ஒதுக்கீடு ஆனபின் சமர்ப்பிக்கலாம் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.