மாணவர்களுக்கு வழங்கிய அரசு மடிக்கணினியில் அதன் ஐபி அட்ரஸ் மற்றும் மேக் நம்பர் பதியப்பட்டிருக்கும். அப்படி இருந்தும் இன்னும் அவற்றை கண்டறியாதது ஏன்? என்று, மடிக்கணினிகள் காணாமல்போனது தொடர்பான வழக்கில் நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

ராமநாதபுரத்தை  சேர்ந்த ஓவிய ஆசிரியர் விஸ்வநாதன். இவர் கடலடி அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சக பெண் ஆசிரியைக்கு  தொந்தரவு அளித்ததின் பேரில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் பள்ளியில் இருந்து பணி இடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த பணி இடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து  மீண்டும் தன்னை ஓவிய ஆசிரியராக பணியமர்த்த அனுமதி கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, "சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கடலாடி பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய
  மடிக்கணினியில் 20 மடிக்கணினியை திருடிய சம்பவத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் அதனை முறையாக விசாரிக்காமல் முடித்து வைத்து விட்டனர். மேலும் 2019 ஆம் ஆண்டு தன்னுடன் பணியாற்றும் பெண் ஆசிரியைக்கு தொந்தரவு தந்ததாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதால் பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தமிழகம் முழுவதும் கடந்த 2012 முதல் 2021 வரையில் 189 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 69 வழக்குகளில் 116 மடிக்கணினிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. பல வழக்குகளில் மாயமான மடிக்கணினிகள் கண்டுபிடிக்கவே படவில்லை. இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டுள்ளனர்.

 

ஒவ்வொரு மடிக்கணினிலும் அதன் ஐபி அட்ரஸ் மற்றும் மேக் நம்பர் பதியப்பட்டிருக்கும் அப்படி இருந்தும் இன்னும் அதனை கண்டறியாதது ஏன் ? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போன மடிக்கணினி வழக்குகளை திரும்ப விசாரணை செய்ய மூத்த அதிகாரியை நியமிக்க வேண்டும். சைபர் கிரைம் போலீசார் உடன் இணைந்து லேப்டாப் ஐபி அட்ரஸ் மற்றும் மேக் நம்பர்களை வைத்து யார் திருடியது என்பதை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.