5 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான வீர தீர விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை பெண் குழந்தைகளுக்கான தேசிய விருது அறிவிப்பு:
''தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த தினத்தன்று வீர தீர செயல் புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கப்பட உள்ளது.
என்ன செய்திருக்க வேண்டும்?
தேசிய பெண் குழந்தை தினத்தன்று விருது பெறுவதற்கு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்விக் கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தைத் திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு இருத்தல் வேண்டும். 5 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள பெண் குழந்தைகள் இருப்பின் பெயர், தாய்/ தந்தை முகவரி, ஆதார் எண் புகைப்படம், குழந்தை ஆற்றிய வீர தீர செயல் மற்றும் சாதனை ஆகியவற்றிற்கான ஆதாரம், ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்களையும் மாவட்ட சமூக நல அலுவலகம், 8 வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம், ராஜாஜி சாலை, சென்னை -1, என்ற முகவரிக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்''.
இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி கேட்டுக் கொண்டுள்ளார்.
போட்டித் தேர்வுக்கு, கட்டணமில்லா நேரடிப் பயிற்சி
அதேபோல சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள மற்றோர் அறிவிப்பில், மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள (போட்டித் தேர்வுக்கு, கட்டணமில்லா நேரடிப் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், ’’கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள SSC (CHSL) -2022 போட்டித்தேர்வுக்கு கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் 19.12.2022 (திங்கள் கிழமை) அன்று முற்பகல் 10:30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பிற்கு சேர, மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள SSC (CHSL) -2022 தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்கவுள்ள தகுதியுள்ள போட்டியாளர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், விண்ணப்பப்படிவ நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் மேற்குறிப்பிட்ட நாளில் சென்னை- 32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்துகொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு, அலுவலக தொலைபேசி எண்கள் 9499966026, 8870976654 மற்றும் 044-22500835, 9499966023 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம்’’.
இந்தத் தகவலையும் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.