ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,582 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதற்காக ஜனவரி மாதம் 7ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு நவம்பர் 1 முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும்.
தொடர்ந்து 08:12:2023 மற்றும் 09.12.2023 ஆகிய இரண்டு நாள்களுக்கு திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருத்தங்கள் மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.
1. இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
- விண்ணப்பதாரர்கள் விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள “சமர்ப்பி (Submit) பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- கடைசியாக உள்ள சமர்ப்பி (Final Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்யவில்லை எனில், அவரின் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து, விண்ணப்பத்தை சமர்ப்பித்தபின் அதில் மாற்றங்களை செய்யக் கூடாது.
- திருத்தம் (Edit Option) மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் உரிய திருத்தம்மேற்கொண்ட பின்பு தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் திருத்தம் செய்யும்பொழுது, மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.
- திருத்தம் செய்த பின்னர் print Preview Page சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றங்கள் டசய்ய இயலாது.
- இனம் (Community) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத்தொகையில் ஏற்படும் மாற்றங்களில் விண்ணப்பதாரரே பொறுப்பாவர்.
- விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர், தேர்வுக்கான முழு கட்டணத் தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும்.
- விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.
மேலும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.